Skip to main content
பாரதியார் | பாரதி 66 -1 |
*
ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்;வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.
*
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;மங்கைதனைக் காட்டினிலும் உடண்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்;
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ?
*
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே.
*
காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ?
(பாரதி அறுபத்திஆறிலிருந்து)மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
Comments
Post a Comment