சேரவஞ்சி கவிதைகள் 13மதிப்பிற்குரிய ஐயா திரு சாமானியர்

குற்றவாளியுமற்ற
நிரபராதியுமற்ற
திரு சாமானியரின்
வழக்குகளால் தான்
கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை

ஒரு சராசரி சாமானியன் அவர்கள்
காலையில் எட்டு முப்பதுக்கும்
ஒன்பதுக்கும் இடையிலான
திருப்பள்ளியெழுச்சியின் நிறைவுப்பகுதியாய்
தலையணைக்குள்ளிருந்து
செல்போனை உருவியெடுத்து
நுழைகிறார் பேஸ்புக்குக்குள்

மிகத்துல்லியமாய்
அடுத்த பத்து நொடிக்குள்
வாதிடத் தொடங்குகிறார்
தன் கட்சிக்காக
தன் தலைவனுக்காக
தன் கிரிக்கெட் அணிக்காக
தன் இளவல் இசைவல்லுனருக்காக
தன் சாதித் தலைவருக்காக
தன் வீட்டுப் பூனைக்குட்டிக்காக
தான் விளக்கிய பற்பசையில் இருக்கும் உப்பிற்காக..

ஒரு மிகுந்த ஆவலின் கனிவோடு
நிரூபித்துக்கொண்டே இருக்கப்
பிரயத்தனப் படுகிறார்
யாரிடமாவது
எதையாவது
எப்படியாவது
எப்போதுமே

ஒரு கண்ணடிக்கிற
ஸ்மைலியில் தன்
வெற்றியை அறிவிக்கிறார்
அவ்வப்போது
ஒருமனதாக.

அடுத்து ஒரு நாள்
அடுத்து ஒரு வழக்கு
அடுத்த நகைச்சுவையின்
அடுத்த சுவாரசியக் கச்சேரி

கனம் சாமானியர் அவர்களின்
வாழ்க்கையிலிருக்கிற ஒரு வேலைப்பளு
'கனம் கடவுள் அவர்களே'வுக்குக் கூட இருக்குமோ இருக்காதோ.

Comments