சேரவஞ்சி கவிதைகள் 19
விட்டுப் பறப்பேன் உங்களை
ஒரு சின்னஞ்சிறு
பறவையாகி

கட்டியிழுப்பேன்
காற்றை
ஓர் ஒற்றைச்
சிறகில்

கொத்திப் பருகுவேன்
அது தன் கையில்
வைத்திருக்கிற
மழையை
குளிரை

உயரப்பறப்பேன்
மேக நிறத்தில்

கூடு கட்டுவேன்
மேகத் தளத்தில்

வழிப்பறி செய்வேன்
வானத்தின் இடியை எல்லாம்

கொடுத்தனுப்புவேன்
உங்கள் யாவருக்கும்
குக்கூவை மட்டும்

தன்னைத் தொடுவேன்
கனம் கனம்
என்னைத் தொட நீளும்
மரவுச்சிக் கரங்களை

பாய்ச்சுவேன்
சொட்டு சொட்டாக
அதன் பச்சைச் சிரசில்
அலகிலிருக்கும்
மழையை எல்லாம்

சிறகடித்துப் பறந்து கட்டும்
மண்ணுக்குக் கீழ்
அது ஒரு மேகக்கூட்டை

வைப்போம்
அதற்கொரு பெயரை
'குக்கூ கட்டும் மழைக்கூடென'
நாங்கள்

பரவும் அதன் கிளை
பச்சை வாடைத் திசை
அதன் பாதை

விட்டுப்பறப்பேன்
உங்களை எல்லாம் ஒரு
சின்னஞ்சிறு
பறவையாகி

தொட்டு வளர்ப்பேன்
உங்கள் முற்றத்துச் செடியின்
வேராய் நான் வந்து

நட்டு வளர்ப்பவர்
நல்ல நினைவில்
நாளெல்லாம்
பூப்பேன்
பொழுதெல்லாம்
மணப்பேன்

Comments