சேரவஞ்சி கவிதைகள் 20
சற்று திறந்த
அலமாரியினுள்
மறைந்துகொள்வதாய் நெளிந்துகொண்டிருக்கிற
அப்பாவின்
சிறுபிள்ளை போல்
அமர்ந்துகொள்கிறது

ஏரிக்குள்
ஏறி
எட்டிப்பார்க்கிற
தனிமையின் ஒரு
மரக்கிளையில்
இளவேனில்
காலத்தில் கூடிழந்த
குக்கூ ஒன்று


ஒன்று உண்டாயெனக் கூட அறிந்திருக்கவில்லை
அது இன்னும்
கூடிழக்கும் காலமென்று
ஒன்றை

இளவேனில் காலத்துக் கூடிழப்போ
அமானுஷ்யத்தினும்
அமானுஷ்யம்
இதற்கு


என்றாலும்
மோசமில்லை
ஒன்றும்


மர நிழலைத் தருகிறது
கரையோரக் குளிர்

பச்சையத்தை
பாசி தருகிறது

இலையுரசும் சங்கீதத்தை
இசைக்கிறது
அலை புரளும் நீர்

சக குக்கூக்கள் வரவுண்டு
வைகரையின் இக் கிளையிலும்

உண்டு ஒன்று
மற்றொன்றாய்
என

ஒவ்வொன்றும் உண்டு இங்கு
கூட்டைப் போலவே
ஏரியிலும்


நேற்றொரு பறவை வந்திறங்கியது
கிளையின் மறு பிரிவில்

எங்கிருக்கிறது உன் கூடு
என்றது இதை அது
கீச்சிக்கொண்டிருந்தன்
மத்தியில்

நீரசைவில்லை
குளத்தில் ஒரு கணம்

தீப்பிடித்தெரிந்தது அதன்
உள்ளுக்குள்ளுக்குள்.


சேரவஞ்சி

#அந்நியப்_பறவை

Comments