சேரவஞ்சி கவிதைகள் 15திரையிடுகிறது வானம்
எதிர்காலத்தைப் பல நிறங்களாக்கி
மிகச்சரியாய்
நான்கு காட்சிகள் தான்
நாளொன்றுக்கு

அதுவொரு
ஒழுங்கு

கட்டி ஏற்றுகிறேன்
காலக் கொட்டகையில்
உருண்டு திரண்ட
பெருங்கனவொன்றை

இணைந்துகொள்கிறாய்
மாலைக் காட்சியில் நீயும்
தனிமையின் எல்லா
விளையாட்டுச் சாதனங்களோடும்்

அந்தி கவியக் கவிய
பந்தி வைக்கிறாய்
உன் ஏகாந்தத்தை
கண்ணுக்குத் தெரிகிற
எண்ணற்ற
விண்மீன்களுக்கெல்லாம்

தொடர்கிறது வானம்
மற்றொரு காட்சியை
மற்றொரு நிறத்தில்

விரைகிறேன் நானும்
மற்றொரு கனவின்
மற்றொரு முனையை
உருட்டிக்கொண்டுு

ஒளிர்கிறாய் நீயும்
உன்பாட்டுக்கு
விண்மீன்கள் சேகரித்த
கண்மீன்களின்
தனிமைக் குளத்தில்.

சேரவஞ்சி

Comments