சேரவஞ்சி கவிதைகள் 16சொற்களின் மத்தியில்
ஓர் ஆழ்துளையிட்டதில்
இடரி விழுந்து
மறைகிறேன்
துளி சப்தமற்ற
லாவகத்தோடு

வழிப்போக்கர்களான
உங்களுள் சிலர்
ஐயோ! என்றுவிட்டுக்
கடக்கிறார்கள்
அதிர்ச்சியின் குறியீடாய்

சிலர் சப்தம் கொடுத்துச்
சோதிக்கிறார்கள்
வீழ்ச்சியின் ஆழம் குறித்த
புள்ளி விவரத்தின் பொருட்டு

சிலர் எப்படியேனும் மேலே வரச் சொல்லி
இறைஞ்சி நிற்கிறார்கள்
வீழ்ச்சியின் சுவாரசியத்தைக் குறித்த
விவரமான அனுபவத்தை அறிந்துகொள்ள

சிலர் அழுவதற்கு முயல்கிறார்கள்
விழுவதற்கு முடியாமல்

சிலர் அழுகிறார்கள்
விழுந்துவிட்டதை எண்ணி

சிலரோ குற்றம்சாட்டுகிறார்கள்
சொற்களற்ற என்
நீண்டகாலஅமைதியை
பழித்துப் பேசி

சிலர் பதற்றமாய்க்
கடந்து போகிறார்கள்
சற்றைக்கு முன் தான்
துளைக்குள் விழுந்து
எழுந்து நடப்பவர் போல

ஒருவர் மட்டும்
மௌனித்து நிற்கிறார்
சொற்களற்ற அன்பின்
வாத்சல்யத்தில் வழிந்தோடும்
தீர்க்கமான கண்களின்
உறுதியான பிரார்த்தனையோடு

ஒதுங்கி நில்லுங்கள்

நான் சத்தியத்தின்
மூர்க்கத்தோடு
மீண்டு எழப்போகிறேன்
ஒளியின் வேகமும்
உடனிருக்கும் தான்

மௌனத்தின் அக்கைகளை பற்றிக்கொள்ளப் போகிறேன்
முத்தமிட்டுப் பலமுத்தமிட்டுப்
பல முத்தமிடப் போகிறேன்.


சேரவஞ்சி

Comments