சேரவஞ்சி கவிதைகள் 18


கவிழ்ந்த பூவென்று
தன்னை நினைத்துக்கொண்ட
குனிந்த முகமொன்றுக்கு
பார்க்கப் பிடிப்பதேயில்லை
ஏதொரு நிமிர்ந்த முகத்தையும்.

என்றாலும்
நிமிர வேண்டியிருந்தது
துரதிருஷ்ட்டவசமாய்;
நிமிர்ந்தேயிருக்கிற முகமொன்றை
சந்தித்த ஒரு சாலையில்

முகஸ்துதியாய்
அலைச்சிரிப்பொன்றை அடித்து
நலம் விசாரித்தது
நிமிர்ந்த முகம்
குனிந்த முகத்தை

குனிந்த முகத்துக்கு
குற்றவுணர்வு தாங்கவில்லை
இதையா நிமிர்ந்து பார்க்காமல்
இருந்துவிட்டோம்
என்றிருந்தது அதற்கு

குறுநகை வீசி குற்றவுணர்வைப்
பிடித்துக்கொண்ட நிமிர்ந்த முகமோ
கனிந்த தருணத்தை
கையிலேந்திச் சிரித்தது
காத்திருந்து உறுமீனை
கவ்விப்பிடித்த கொக்கைப் போல்

சற்று நேரத்தில்
தொடங்கிய பேருரையில்
பட்டியலிட்டது நிமிர்ந்த முகம்;
பார்த்த முகங்களின்
பதப்படுத்தப்பட்ட வார்த்தைகளின்
கனத்துப் போன கதைகளை

நிமிர்ந்த இரு
முகங்களில் ஒன்று
குனிந்தது மீண்டும்
சட்டென

சொற்களற்ற மெல்லிதழ்களின் அமைதியில்
சொல்லிக்கொண்டது தனக்குத்தானே

கவிழ்ந்த பூவென்றால்
உதிர்ந்து விழவேண்டுகிறது
மண்ணின் அதிகாரம்

பூவுக்குப் பரிந்து பேசும்
பூக்களின் மௌனமோ
எப்படிச் சபையேறும்?

சேரவஞ்சி

Comments