சேரவஞ்சி கவிதைகள் 17
வெயில்
கொட்டிவிட்டுப் போகிற
வெளிச்சம்

வந்ததும் வராததுமாய்
கிளம்புகிற
அந்தி வானத்து
மஞ்சள்

ஆளரவமற்ற
பகலில் இரவில்
மழை சிந்திவிட்டுப் போகிற
சின்னஞ்சிறு சாரல்கள்

இரவு
போர்த்திவிட்டுப் போகிற
அமைதியின் ஆதுரம்

அல்லும் பகலும்
அணில் தடங்கள்

மாலைவரை
அமர்ந்துவிட்டு
வீட்டுக்குள் திரும்புகிற
இரு பூந்தொட்டிகள்

பூந்தொட்டிகளை
வைத்தெடுத்து
வருகையில் எல்லாம்
அணில்களுக்கு மறக்காமல்
முந்திரி எடுத்துப் போகிற நீ

கண்டதில்லை நான்
உப்பரிகையில்
தோன்றி மறைகிற
சின்னஞ்சிறு
கடவுள்களைப் போல

வீட்டிற்குள்
சுவரில் தொங்கும்
கலர் படங்களில்
எதையும்.

சேரவஞ்சி

Comments