பஷீரிஸ்ட் குறிப்புகள் 1


பஷீரிஸ்ட் குறிப்புகள் :

சிங்கிள் டீயும் பஷீரின் அழகும் :

Random thoughts....

விடியலிலிருந்து தொடங்கி ஒரு கோரப்பசிக்குப் பின் மதியத்திற்கு மேல் கிடைக்கும் ஒரு காலணா டீயையும் ஒரு அரையணா தோசையையும் இன்னொருவரோடு பகிர்ந்துகொள்ளக் கூடிய பிறந்தநாள் கதையான 'ஜென்மத்தின'த்தை எதோ ஒரு தளத்திலும் பின் தொலைபேசியிலும் பின் புத்தகத்திலும் என என்னை அறியாமல் மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன். அந்தச் சிறுகதை ஏனோ நெஞ்சிற்கு அத்தனை நெருக்கமான ஒன்று.

கோடி தான் இருந்தாலும் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு படிப்பதில் இருக்கும் சுகானுபவம் வெறெந்தத் தொடுதிரை சாதனங்களில் வாசிக்கும் போது கிடைப்பதில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு உலகத்தரமான இலக்கியத் துணுக்கை வாசித்ததற்குப் பின் அந்தப் புத்தகத்தை நெஞ்சின் மேல் வைத்துகொண்டு  வானத்தைப் பார்ப்பதற்கும். ஐப்பேடை நெஞ்சோடு அணைத்துக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது தானே .... குறிப்பாக பஷீருடைய புத்தகங்களை வாசிக்கும் போதெல்லாம் ஒருமுறை அட்டைப்படத்திலிருக்கும் அவரது புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே வாசிப்பேன்.

பஷீர், அவரே சொல்வதை போல.

"பரவாயில்லை , குறை சொல்லும் அளவிற்கு இல்லாத அழகு"

என்கிற வார்த்தைகளை எனக்குள்ளும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்...

எத்தனையோ அழகான மனிதர்களுக்கு மத்தியில் பஷீரின் அழகிலிருக்கும் தனித்துவம் மனதை எத்தனை லாவண்யமாக வசீகரிக்கிறது.  இலக்கியம், மனித முகங்களுக்கு எத்தனை ஒளி பொருந்திய அழகை சேர்ப்பித்து விடுகிறது என்பதற்கு பஷீர் ஒரு அழகான உதாரணம்.

என்னவோ நமக்குத் தெரிந்த போதை எல்லாம் புத்தகங்கள்.
நமக்குத் தெரிந்த சைட் டிஷ் அவற்றின் அட்டைப்படங்கள் தான்.

பதிப்பாளர்கள் யாரேனும் மீண்டும் மீண்டும் பஷீருடைய புத்தகத்தை செம்பதிப்பாக வெளியிடும் போது, அவரது எல்லா படைப்புகளுக்கும் அட்டைப்படமாக அவரது புகைப்படத்தையே வைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதுதான் சரியான, நியாயமான, அழகான அட்டைப்படமும் கூட. :)

#வைக்கம்_முகமது_பஷீர் #vaikkom_Muhammed_basheer #basheer

ஏப்ரல் 19,2017
மீள்பதிவு

Comments