சேரவஞ்சி கவிதைகள் 21


ஊர்கிறது
மற்றொரு நொடிக்குள்
வாழ்வு
மௌனத்தின்
இசை
மௌனத்தின்
லயம்
மௌனத்தின்
ரீங்காரம்
அதற்கு
காற்றிலிருந்து அல்ல
காற்று நகர்த்துகிற சிறு
பூத்துகளிலிருந்து
பெறுகிறது அது
அதன் சுவாசத்தை
பொதுவாய்
அந்தந்த நொடியைப் பிடிக்காத
அந்தந்த நொடிக்கற்றைகளின்
தொகுப்பான வாழ்வோடு
அமர்ந்து பேசுங்கள்
முகில்களில் சில துண்டுகள்
காற்றின் சில துகள்கள்
மௌனத்தின் சிறு கீற்றுகள்
பரிதியுறுத் தெரிகிற
கிணற்று நீரின் நிச்சலனம்
பூத்துகள்
அதுகளின் அதிசய
மதுரத்துணுக்கு
சின்னஞ்சிறு
தும்பியொன்று
எதையும் கேட்கலாம் நீங்கள்
எப்போதும் பார்க்கலாம்
அவர்களை
மௌனத்தின் பிரஜைகள்
இறைதூதர்கள் எல்லாம்
செல்லவேண்டாம்
எந்தக் கோவிலுக்கும்
செய்யவேண்டாம்
எந்தப் பிரார்த்தனைகளும்
கடவுள்கள் கருங்கற்கள்
மனிதர்கள் சதைக்கற்கள்
என்றாலும் உங்கள் நம்பிக்கையை
சிதைப்பதல்ல என் பிரார்த்தனை
சென்றாலும் வழிபடுங்கள்
பூக்கள் பூக்க
மண்டியிட்டு வணங்குங்கள்
எந்தக் கோவிலின்
எந்த மரத்தையும்
எந்த மலையின்
எந்த நீரூற்றையும்
எந்தச் செடிகளையும்
எந்த அணில்களையும்
பலணுண்டு அதற்கெல்லாம்
பரவாயில்லை
துயரிலிருந்து விலக
எதைச் செய்யாவிடினும் நீங்கள்.
குறைந்தபட்சம்
விட்டு விலகுங்கள்
ஒரு மனிதனை
விட்டு விலகுங்கள்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மனிதனாய்

சேரவஞ்சி

Comments