சேரவஞ்சி கவிதைகள் 22ஆளரவமற்ற
கோவில்களுக்குச்
செல்வது வழக்கம்
இரவின்
பூரணத்தை தரிசிக்க

ஆளரவமற்ற
அனைத்து இடங்களிலும் பின்பு
உணரத் தொடங்கிய
மௌனத்தின் பூரணத்தையெல்லாம்
கோர்த்துக் கட்டியது
கால நடையால் இறுக

கடத்திக் கொண்டு போய்
மனம் எழுப்பியது
அதன் தனிக்கோவிலை

பிரதிஷ்ட்டை செய்தது
பேசாத விக்கிரகங்களை

உச்சரித்தது மந்திரங்களை
உள்ளும் புறமும் சென்றுவரும்
ஓம் என்னும் காற்று

இருள் மயமான இறைவன்
மௌனத்தின் மாதேவன்
விரவிக் குடிகொண்டான்
மனதின் கருவரையில்

யாரோ வரச்சொல்லி
கோவிலுக்குச் சென்ற
சாலையில் எதிர்ப்பட்ட மனிதர்
யாரையோ பலித்துக் காட்டி
சிரிக்கப் பணித்தார் என்னை.
சிரிக்க வேண்டியிருந்தது அன்று
அவர் மனம் நோகக்கூடுமென்று.

அமைதியாய் வீடு திரும்பினேன்
அடித்துக் கூடடைந்தேன்
சிறகிசையின் பின்னணியில்
அழுத பறவை போல ஏனோ

எழுப்பினேன் அன்றே
என் கோவிலை
என் தெய்வத்தை
சிறகடிப்பின் பறையிசை சாட்சியாய்

இப்போதெல்லாம்
இரைதேடச் செல்கிறேன்
கூடு திரும்பிக்
குருவியோடு இசைக்கிறேன்
என் இரவின் பாடலை

தனி உலகம்
சிறு கூடு
கீச்சுக்கள் பேச்சுக்கள்
இசைக்கருவிகள் கோவில்கள்
தாளங்களின் இடைவெளியில்
தெய்வங்களின் தரிசனங்கள்

மனத்தின் சிவனுக்கு
மௌனத்தில் அபிஷேகம்.

எது பெரிய கோவில்
என் மனதிற்கு வெளியில்?


சேரவஞ்சி

Photo  Manivannan Thangavelu

Comments