ஷெனாயின் ராஜா - Ilaiyaraja and Shenoy43 YEARS OF RAAGADHEVAN !!


ராஜாவும் ஷெனாயும் அன்னக்கிளியும்.

அன்னக்கிளி வெளியான நாள் இன்று.
(மே 14)

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் இசைப் பேரரசரின் பாடல்கள் திரையில் தோன்றியது இன்றுதான்.

வெகு நாட்களாக ஷெனாய் இசைக்கருவியில் ராஜா நிகழ்த்திக்காட்டிய அற்புதங்களைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு ஒரு புத்தகம் தான் எழுதவேண்டும் அத்தனை செய்திருக்கிறார். செய்வோம் ஒரு நாள் மிகத்தீவிரமாக. ஷெனாய் நாதத்தை நான் எப்போதும் ராஜாவின் குரலுக்கு ஈடாகச் சொல்வேன். எனக்கு ராஜாவின் குரலும், ஷெனாய் இசையும் ஒன்றே. எல்லா பாடல்களிலுமிருந்து ஷெனாயை மட்டும் உருவி எடுத்து ஒரு ஓவியம் போல் சுவரில் வரைந்து பார்ப்பதைப் போல அதன் இசையை ரசிக்கிற பழக்கம் எனக்கு உண்டு.

சரி ஷெனாய்க்கு வருவோம்.

Extensive ஆக ஷெனாய் பயன்படுத்தப்பட்ட ராஜாவின் முதல் படம் 'அன்னக்கிளி'.

முதல் படத்தின் முதல் காட்சியின் பின்னணி இசையில் பயன்படுத்திய முதல் வாத்தியம் ஷெனாய் தான் என்பது கூடுதல் தகவல்.

அவர் இந்த வாத்தியத்தை, இதன் மேன்மையை எவ்வளவு நம்பியிருக்க வேண்டும், எவ்வளவு காதலித்திருக்க வேண்டும்!

ஷெனாயிலிருந்து தான் இந்தப் பின்னணி இசைப் பிரபஞ்சம் துளிர்த்துக் கிளைவிட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

அன்னக்கிளி பாடலின் தொடக்க இசை மற்றும் மச்சானப் பார்த்திங்களா பாடலின் இரண்டாவது இடையிசையில் இடம்பெறும் shenoy piecesன் தரம் இன்றும் கூட செம்மை மாறாது அதே உணர்வின் ஆழத்தை, மென்சோகத்தை மனதில் இழையோட வைக்கிறது. ஷெனாயின் குணத்தை சரியாகப் புரிந்துகொண்டு அதை அப்படியே தன் இசையில் பயன்படுத்தியவர் ராஜா மட்டுமே!

ராஜாவைத் தவிர ஷெனாய்க்கு மரியாதை செய்தவர்கள் உலகிலேயே யாரும் இருக்க முடியாது என்று எப்போதும் தைரியமாகச் சொல்லலாம்.

அத்தனை செய்திருக்கிறார்.

இரண்டு பாடல்களையும் கேளுங்கள்..அந்த 'shenoy pieces' அதுகள் மட்டும் உங்கள் இதயத்துக்கு என்ன செய்கிறதென்று உற்றுக் கவனியுங்கள். தமிழ் சினிமாவில் இன்று ஷெனாய் கிட்டதட்ட செத்துவிட்டது. இன்றைய ரசிகர்களுக்கு ஆலுமா டோலுமாவே போதுமானதாக இருக்கிறது.

இசைப் பிரியர்களே. நீங்கள்.உண்மையாகவே இசையை, அதன் மகத்துவத்தை விரும்புகிறவர்களென்றால் அதிவேகமாக ராஜாவின் முதல் படத்துக்கு உங்கள் இசைப்பயணத்தைத் திருப்பி விடுங்கள்.

நீடு வாழ்க!

Comments


 1. இசைதேவன்
  =============

  சமகால சரித்திர சகாப்தத்தோடு
  வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...நாங்கள்..!!
  பெருங்காடு ஒன்றினுள், தனித்தலையும்
  காற்றென இசை உன்னுள் பரந்து பரவிச் செல்லும் வழியில்
  சிறுபுல்லென அசைவுற்று அமைந்திருக்கிறோம்..!!

  கோவில் வாசலில் இரப்பவரென அமர்ந்திருக்கையில்
  'இந்தா..பிடி ' என, என்றென்றும் வாழ வழுத்தும்
  அமுதை இசையாக அள்ளித் தெளித்துச் செல்கிறாய்..!!
  மூலவர் வீதியுலா போல் அவ்வப்போது உன் ஆர்மோனியத்தை,
  இசை ஆரோகணத்தை அனுபவிக்கையில்
  வேறொன்றும் குறை இல்லை எங்களுக்கு..!!

  இராகங்கள் தங்களுக்குள் நிரை ஒன்றை அமைத்தே
  உன்னுள் எழ விழைந்தெழுகின்றன...
  உன் பேரிசைப் பாடல்களை எங்கள் வாழ்வினுள்
  பொருத்திக் கொள்வதற்காகவாது, காதலித்தாக
  வேண்டியிருக்கிறது..!! ஒரு இசையுகமாய் எங்களை ஆண்டு
  எங்களின் தனிமையை நிறைத்தாளுகிறாய்...!!

  என்ன செய்திருப்போம் இளையராஜா என்னும்
  இராகதேவன் எங்களுக்குள் பிறந்திராவிடில் ..??
  காதலின் நுணுக்கங்கள் வெறுங்காதலோடு
  புரிவதில்லை; உன்னிசையால் எங்களை நிரப்பிக் கொள்ளும்போது மட்டுமே
  காதலை எங்களால் உணர முடிகிறது..!!

  சமகால சரித்திர சகாப்தத்தோடு
  வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...நாங்கள்..!!
  வேறென்ன வேண்டும்.... எம் தலைமுறைக்கு
  உனைப்பற்றிச் சொல்லி சொல்லி மாய்வதைவிட..??!!


  ---அனலோன்

  ReplyDelete
  Replies
  1. அருமையான பின்னூட்டம் - பிரதீப்.

   Delete

Post a Comment