இளையராஜாவுக்குப் பின் யார்?இரண்டு நாட்களுக்கு முன் நண்பர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இளையராஜாவுக்குப் பிறகு யார்தான் அப்போ தரமான இரைச்சலற்ற இசை தர்றது?

இரைச்சலற்றது தான் முதலில் நல்ல இசை என்கிற புரிதல் பிடித்திருந்தது. பிறகு இரைச்சலற்ற இசை பிறப்பதற்கான காரணங்கள் இரண்டு.

1.முதலில் இசையமைப்பாளர் மனம் இரைச்சலற்றதாகவும், சலனமற்றதாகவும், அடர்த்தியானதாகவும், எளிமையானதாகவும் இருக்கவேண்டும். பல்வேறு சப்தங்களை இட்டு நிரப்பி பாடல் முழுவதும் இறைத்து வைப்பது இசையாகா. அதுவும் தற்காலத்தில்  iMAC கணிணிகளுக்கான இசைக்கோர்ப்பு மென்பொருள்களில் கோர்க்கப்பட்ட சேம்ப்ளிங் இசையைத் தான் பெரும்பான்மையான இசையமைப்பாளர்கள் "பாடல்கள்" என்று சுவைஞனுக்குத் தருகிறார்கள். அப்படி இருக்கையில் முழுப்பாடலையும் Manual ஆக வாசித்து அதை பதிவு செய்யும் போது அதன் தரம் எவ்வளவு மேன்மையானதாக இருக்கும்? சேம்ப்ளிங் இசைக்கும் Live ஆக ஒருவர் வாசித்து அதைப் பதிவு செய்வதற்கும் இடையேயான வித்தியாசம் ஒரு மலை சுயம்பாக உருவாவதற்கும், ஒரு மலையை மனிதன் உருவாக்க நினைத்துக் குடைந்து குடைந்து அதை செதுக்க எத்தனிப்பதற்கும் இடையிலிருக்கிற வித்தியாசம் தான்.

ராஜாவே பலமுறை சொல்லியிருப்பதைப் போல Definitely, There is no music without an artist. கலைஞனிடமிருந்து பிறக்கிற இசை வேறு கணிணியிடம் இருந்து பிறக்கிற இசை வேறு. யுவன் சமீபத்தில் "அன்பே பேரன்பே" பாடலை ஷ்ரேயாவும், சித்தும் பாடிய பிறகு பாடல் மிகவும் அற்புதமாய் இருக்கிறதை உணர்ந்து சேம்ப்ளிங் முறையில் கணிணியில் ஏற்கனவே கோர்க்கப்பட்ட பாடலின் பின்னணி இசையை விட்டுவிட்டு பிறகு அதை live instruments வைத்து வாசித்துப் பதிவு செய்தோம் என்று சொன்னார். Apparently, நல்ல இசை என்பது கலைஞனிடமிருந்து பிறப்பதுதான். பின் ஏன் கணிணியிலேயே இசை கோர்க்கிறார்கள் என்று கேட்டால் நான்கு இசை வாத்தியக்காரர்களுக்குக் கொடுக்கிற காசை கணிணி மிச்சப்படுத்திவிடுகிறதே. அதனால் தான்.

2. ஒரு இசையமைப்பாளருக்கு சவுண்டு இஞ்சினியர்கள் வாய்ப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். எவ்வளவு நன்றாக இசைகோர்த்தாலும், சிரமத்துடன் பாடினாலும் அதை நேர்த்தியாகப் பதிவு செய்வது தான் இரண்டாவது முக்கியமான வேலை. ரேடியோ, தொலைக்காட்சி, surround system ஒலிப்பெருக்கிகள், இசைகேட்பிகள், பேருந்து மகிழுந்து ஒலிப்பெருக்கிகள், என பல்வேறு கேளொலி அமைப்புகளை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு அந்தப் பாடலை அதற்குண்டான நிபுணத்துவத்துடன் அவர் பதிவு செய்யவேண்டும். தற்போதிருக்கிற ஒலியின் தரம் மற்றும் பதிவு செய்கிற தொழில்நுட்பங்கள் 80,90 களில் இருந்திருந்தால் இளையராஜா யாராக இருந்திருப்பார் என்று நான் சொல்லத் தேவையில்லை. புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்குப் புரியும். அப்படி தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்திலேயே இசையில் மௌனம் எங்கே நிறைந்திருக்கவேண்டும் என்பதை மிகத்தீர்க்கமாகச் செய்திருப்பார். ஒவ்வொரு பாடலுமே அதற்கு நின்று சாட்சி சொல்லும்.

இந்தத் தலைமுறைக்கு வாய்த்திருப்பது வெறும் ஐபேட், ஐமேக் மென்பொருள்கள் எழுப்பும் ஆழமற்ற, அடர்த்தியற்ற, மொன்னையான சப்தங்கள் தான். இசை இல்லை. நான் மென்பொருட்களை , தொழிநுட்பங்களை எந்த விதத்திலும் குற்றம் சாட்டவில்லை. ஆனால் வணிக நோக்கத்திற்காக பல இசையமைப்பாளர்கள் அதை மட்டுமே  நம்பி அதை இசை என்று கொடுத்துக்கொண்டிருப்பது நல்ல இசையை நாமே தடயமில்லாமல் அழிப்பதற்குச் சமம்.

Experimentation, innovation இதெல்லாம் தேவை தான். ஆனால் அது பயன்படுத்தப் படவேண்டிய இடத்தில் , சரியான அளவில் இருந்தால் நலம். கருணை என்பது ஒரு உணர்வு, அது ஒரு மனிதனின் புல்லாங்குழலிலிருந்து வாசிக்கப்படும் போது அது மேலும் அழகாகவும், அடர்த்தியாகவும் ஆகிற சாத்தியமுண்டு.  கணிணியிலிருந்து கசிகிற கருணை எத்தன்மையது?

~~
ஓவியம் : Dhruba Chandra Roy

இந்த ஓவியத்தை என் பார்வைக்குப் பகிர்ந்தருளிய நவீன் கவுதமிற்கு முத்தங்கள்

Comments