நான் செல்வராஜ் ப்ரண்ட் - வண்ணதாசன்

நான் செல்வராஜ்  ஃப்ரண்ட்.
__________________________

ஆள்வார் பேட்டையில் இருந்து அஷோக் நகர் போக வேண்டியது இருந்தது. சந்தியா பதிப்பகம் என்று ஆட்டோ ஓட்டுநரிடம் சொல்லவில்லை. ஆஞ்சநேயர் கோவில் பக்கம் என்று சொன்னேன்.

பேரம் பேசவும் தெரியாது. உத்தேசமாக எவ்வளவு கொடுக்கலாம் என்றும் தெரியாது. அவர் ஒரு தொகையைச் சொன்னார். மீட்டர் போட்டால் எவ்வவளவு ஆகும் என்று கேட்டேன். அதையும் அவர் சொன்னார். கேட்ட தொகைக்கு மிகக் குறைந்த தொகை அது.

அப்படிச் சொன்னது பிடித்திருந்தது. பிற்பகல் 2.45க்கு மேல் அப்போது. சாப்பிட்டீர்களா என்று கேட்டேன். சாப்பிட்டிருந்தார். தொகையைக் குறைக்கவில்லை. சரி, போவோம் என்று ஆட்டோவில் உட்கார்ந்தாயிற்று.

மெலிந்த உடம்பு. ஒரு சிமெண்ட் நிற சட்டை. அடர்த்தி குறைந்த,முன்வழுக்கை விழுந்த, திரித் திரியாய் கழுத்து வரை தொங்கும் முடி. பேச்சே இல்லை. சரியான பாதையில் போய்க்கொண்டு இருந்தார்.

மேற்கு மாம்பலம் ராஜு நாயக்ககன் தெரு வழியாகப் போனார். நாங்கள் குடியிருந்த வீட்டைத் தாண்டும் போது அவரிடம் சொல்லத் தோன்றியது. ' இந்த வீட்டிலதான் மூணு வருஷம் இருந்தோம்' என்று சொன்னேன்.

எனக்கு அடையாளம் தெரியாத ஒரு வழியாகப் போய் சரியாக 53 வது தெருவில் நின்றார். வலப்பக்கம் நேராகத் திருப்பிப் போகச் சொன்னேன்.

வாசல் கதவில் ' சந்தியா பதிப்பகம்' என்று இருந்த போர்டை அவர் வாய்விட்டு வாசித்தார். ' புக்ஸ் எல்லாம் வாசிப்பியா சார்' என்று கேட்டார். ஆமாம் என்றதும், ' ஜெயகாந்தன் நம்ம வண்டியில தான் வருவாரு சார்' என்றார்.

ஆட்டோவை விட்டு அவராகவே கீழே இறங்கிவிட்டார். இப்போது ஜெயகாந்தன் என்று சொல்லவில்லை. ' ஜே கே ஃப்ரண்ட்ஸ் எல்லார்க்கும் செல்வராஜ் னு சொன்னா தெரியும் சார்' என்று சிரித்தார்.

எனக்கு செல்வராஜை நன்றாகவே தெரிந்தது. அவரைப் பக்கத்தில் இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டேன்.

செல்வராஜ் ஃப்ரண்ட் என்று சொன்னால் என்னை இனிமேல் உங்களுக்குத் தெரியாதா போகும்?
.
%

2017

- வண்ணதாசன்

Comments