தொல்லுயிர் எச்சம் என்றால் என்ன


தொல்லுயிர் எச்சம் என்றால் என்ன?

அறிவியல் படிக்கிற 12 வயது மாணவனோ பெரியவர்களோ, யாருமே கொஞ்சம் தடுமாறியே பதில் சொல்வார்கள்.

அறிவியல் பரப்புநர் சிபுசிசோ பயிலாவின் வகுப்பில் படிக்கிற தென்னாப்பிரிக்கக் குழந்தைகள் முதலில் ஆங்கிலத்தில் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுவே சிரமம். அதை அவர்கள் பேசுகிற சூலூ மொழியில் பெயர்க்கும்போதுதான் சவால் கூடுகிறது. அந்த மொழியில் பல அறிவியல் கருத்துக்களுக்கு சொற்கள் இல்ல.

ஒரு சிறுமி "கரி" என்றாள்.... தொல்லுயிர் எச்சம் சார்ந்து வருகின்ற எரிபொருள்தான் கரி என்பதால் அது ஓரளவு சரிதான். "மண்ணில் கிடைக்கும் பழைய எலும்புகள்" என்றான் ஒரு சிறுவன். உணர்வுரீதியாக இந்தப் பெயர்ப்பு சரிதான் என்றாலும், தாவரங்கள்கூடத் தொல்பொருள் எச்சங்களாக வாய்ப்பு உள்ளது என்பதால் இதுவும் பொருந்தாது.

உலகெங்கிலும் பல மொழிபெயர்ப்பாளர்கள் அறிவியல் கருத்துக்களுக்கான மொழிபெயர்ப்புகளை உருவாக்கியவண்ணம் இருக்கிறார்கள். சில நேரங்களில் இதைச் செய்யும்போது ஆங்கிலத்திலேயே இயல்பாக இருக்கும் சில சார்புகளையும் தவறுகளையும் நாம் திருத்தலாம். உதாரணமாக, "டைனோசர்" என்ற சொல், "மோசமான பல்லி" என்பதைக் குறிக்கிற பண்டைய கிரெக்க சொல்லிலிருந்து வந்தது. இதை  சூலூ மொழியில் அப்படியே மாற்றாமல் "தொல் விலங்கு" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

சிலநேரங்களில் இதுபோன்ற புதிய சொற்கள் ஆங்கிலச்சொற்களைவிட கவித்துவமானவைகளாக இருக்கலாம்.  உதாரணமாக நோய் எதிர்ப்பு மண்டலம் என்ற சொல்லை சூலூ மொழியில் "உடலின் ராணுவவீரர்கள்" என்று மாற்றியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் எப்படி ஒரு விஷயத்தை விளக்குகிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது,

சிலநேரங்களில் இந்த புது சொற்கள் எளிமையை முன்னிலைப்படுத்தலாம். உதாரணமாக சைகை மொழியில் டி.என்.ஏ என்று சொல்லவேண்டுமானால் அதன் எழுத்துக்களை வரிசையாக சைகை மொழியில் செய்து காட்டுவார்கள். அதற்கு மாற்றாக ஸ்காட்லாண்டைச் சேர்ந்த ஒரு மருத்துவ மாணவர் டி.என்.ஏ வுக்கான ஒற்றை சைகையை உருவாக்கியுள்ளார்.
பொருட்கள்தாண்டி, புலன்கள் சார்ந்த சொற்களிலும் வேறுபாடுகள் உண்டு. யோர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் மொழியாளர் அசிபா மஸ்ஜித், தனது ஆராய்சியில், பல ஐரோப்பிய மொழிகளில் வாசனை/நறுமணம் சார்ந்த சொற்கள் மிகவும் குறைவு என்று கண்டறிந்திருக்கிறார். தாய்லாந்தின் மொழியோடு இதை ஒப்பிட்டால் அந்த மொழியில் மணம் சார்ந்த சொற்கள் அதிகம் என்றும் கண்டறிந்தார் - பொரிக்கும் எண்ணெயின் வாசம், கரப்பான்பூச்சியின் மணம், அடுமனையிலிருந்து வெளிவரும் பிரட் போன்ற மெது உணவுப்பொருட்களின் மணம் என்று பல சொற்களைப் பட்டியலிடுகிறார். தாய்லாந்து மக்களுக்கு இந்த வாசனைகள் மதச்சடங்குகளிலும் சமையலிலும் முக்கியமானவையாக இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. அதனாலேயே அவற்றுக்கான சொற்கள் இருக்கின்றன.

ஒரு மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அதில் அறிவியல் சொற்களை மொழிபெயர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

- க்றிஸ்டின் ரோ

நன்றி Narayani Subramanian

Comments