கடைசிச் சிறகின் கருணை

கடைசிச் சிறகின் கருணை
~
தனித்த ஒரு
கிளையின்
தடித்த மருங்கில்
அமர்ந்திருக்கிறேன்

எதிர்க்கிளைகளில்
கூச்சல்

எது உன்னுடையது
எது என்னுடையது
என்கிற சிறகடிப்பின் கீச்சுக்களோடு
உதிர்கிறது சில இறகுகள்

நீங்கள் கேட்கிறீர்கள்

சற்றே ஒடிந்ததும்
மிகப் பழையதுமான
என் மரக்கிளையிலிருந்து
ஏன் உதிர்வதில்லை
எந்த இறகுகளும்?
என்றால்
நான் என்ன சொல்ல

எங்குமே இல்லை
என்னுடையதென்றும்
உங்களுடையதென்றும்
எதுவும்

கிளை
கிளையினுடையது
மரம்
மரத்தினுடையது
சிறகு
சிறகினுடையது

சூரியக் கதிர்களின்
வெளிச்சக்கற்றைகளுக்குள்
சென்று திரும்புகின்றன
என் சிறகுகள் அன்றாடம்

வெளிச்சத்தைக் காட்டினால்
வெளிச்சம் உங்களுடையதென்பீர்கள்
என்று தான் யாருமறியா திசையில்
என் சிறகுகளை மட்டும் அனுப்புகிறேன்
ஒளியின் தரிசனத்திற்கு
ஒவ்வொரு நாளும்

பறத்தலை தடைசெய்கிற என்
கடைசி சிறகுகளின் கருணை
உதிரும் போதும் சொல்வேன்
இந்த ரகசியத்தை

எதுவும்
நம்முடையதல்ல
வெளிச்சமும் கூட
வெளிச்சத்தினுடையதே!

~
சேரவஞ்சி

Comments