ஆறு பழங்களும் மூன்று மனிதர்களும்

ஆறு பழங்களும் மூன்று மனிதர்களும்
~
எல்லா பழத்திற்கும்
அன்பின் சுவை

புற்றரித்த ஓர்
மதிய நாளின்
பட்டாசாலைக்குள்
பச்சை மிக்ஸியில்
அப்பாயிக்கு
மாதுளைப் பழரசம்
அடித்துக்கொண்டிருந்தார்
அப்பா
தளர்வதனைத்தையும்
தாங்கிப் பிடிக்கும் அக்
கெட்டிக் கைகளின்
வாசனைதான் ஒவ்வொரு
மாதுளைக்கும்

புற்றரித்த ஓர் பின் மதியத்தில்
அப்பாயியைப் பார்க்க
ஆசுபத்திரிக்குச்
சென்றிருந்தேன்

"கரண்டு வைக்கிறாங்க சாமி"
என்று பாதி திறந்த கண்ணுடன்
பார்த்த அப்பாயி
பெயர் தெரியாத ஒயர்கள்
குத்தபட்ட உடம்புடன்
கிடந்தது தலைதூக்கிய
இறும்புக்கட்டிலில்

விசயமோ என்னவெனில்
வெறும் பழம் தான்

கருப்புத் திராட்சை
வாங்கி வருவான் பேரன் என்று
யாரோ ஒருவரிடம்
சொன்னதாய்ச் சொல்லிக் கேட்டது
என்னிடம்
"திராட்சை எங்கே" என்று..

அறையிலிருந்து வெளியேறிய
அன்றைய கண்ணீரின் சுவைதான்
ஒவ்வொரு கருந்திராட்சைக்கும்

வயர்களை நம் உடம்பில்
குத்திய பின்னொரு நாளோ
நம்மைச் சுற்றி ஆட்கள் நின்றார்கள்
"தினம் மூணு ஜூஸ் குடிப்பான்"
ஆப்பிள் ஜூஸ் ரெண்டு வாங்கிட்டு
வாங்கப்பா என்றார்
நான்கு பெருங்காந்தியை நீட்டி

சொற்ப காந்திகளே
சொந்தம் எனினும்
கண்ணை மூடிக்கொண்டு
பைக்கட்டில் இறங்குகிற
அன்பின் கைகளுக்கு
ஆப்பிளின் செவ்வாசனை

கடைசியாக
ஒரு பழஞானியின் கதை

இளமஞ்சள் பழச்சாறில்
சரியாக மூன்று கருப்பு திராட்சையும்
இரண்டு வெள்ளைத் திராட்சையும் போட்டால்தான் அருமையென்பான்
அண்ணன்
பழங்கள் பலவெனினும்
மார்க்கமான
கலவைப் பழங்களுக்கு
சத்தியமாகச்
சகோதரச்சுவை

~

Comments