ஆரஞ்சு வண்ணச் சீர்கேடு

ஆரஞ்சு வண்ணச் சீர்கேடு
~
திராட்சை வண்ணத்தில்
மீந்திருந்த
நேற்றைய சீர்கேட்டில்
இரண்டு மிடற்றை அருந்தித்
தொடங்குகிறான் புத்தன்
பரிசுத்தமான இப்
புதிய நாளை

ஏனோ நேற்றிரவின்
கண்ணில் படாத
மஞ்சள் நிறத்திலான
சீர்கேட்டின் இரண்டு துண்டில்
ஒன்றை எறும்பு தின்றுகொண்டிருந்தது
இன்னொன்றை இவன் தின்றான்
காலை உணவாக

மதிய உணவுக்கு
ஒன்றுமில்லையாதலால்
புதிதாய் ஒரு சீர்கேட்டை
பிரித்தெடுத்து உலையிலிட்டான்

உண்டான்
இரண்டு கொதி உருண்டையை
அதில்

மாலைக்குள்
எப்படியும் யாரேனும்
துணைக்கு வந்திடுவார்கள்
என்று காத்திருந்தான்
மதிய வெயிலின்
சிறு துண்டோடு
உரையாடிக்கொண்டே

மாலைக்குள்ளிருந்து
இரவு வந்தது
இரண்டு புதிய சீர்கேட்டைக்
கைப்பிடித்துக்கொண்டு

சட்டென
அசரீரியாய்
மாறிப்போன புத்தன்
அடிவானத்திலிருந்து கத்தினான்
ஊர்கேட்க

சீர்கேடே புத்தன் கோவில்
சீர்கேடே புத்தப்பாதை
வழிப்போக்கர்களான
உங்களுக்குத்
தர ஒன்றுமில்லை

ஒன்றுமற்றிருத்தலே வழிபாடு
ஒன்றுமற்றுத் திரும்புதலே பிரசாதம்
ஒன்றுமற்ற ஒன்றிருந்தால்
போதாதா
உங்களுக்கெல்லாம்

அடுத்த புத்தன்
விடிந்தான்
அற்புதமான
ஆரஞ்சு வண்ணச்
சீர்கேட்டுடன்

~

Comments