சேரவஞ்சி கவிதைகள் - சொல்லின் இளஞ்சூடு

சொல்லின் இளஞ்சூடு :
~
தொட்டிச்செடிகள்
கூதிர்காலத்தில்
கறுக்கத் தொடங்கும் பழியை
ஒரு போதும் வைப்பதில்லை அவன்
எந்தக் கடவுள்களின் பெயர்களின் மீதும்

காட்டை விட்டு மரமும்
மரத்தை விட்டுச் செடியும்
தொட்டிக்குத் தாவியது
எப்போதோ
அப்போதே பழகியிருக்கும்
அனேகமாய்ச் செடிகள்
கறுத்துச் சுருளும்
காரிருள் கலையை
என்றான்

ஆம்
உலகின் முதல்
குளிர்காலம்
பூக்களைக் எரிக்கப்
பெய்திருக்காது
பனியை

என்றவன் அடுக்கும்போது
சற்றே வெளிர் நிறத்தில்
மலர்ந்துகொண்டிருந்தேன்
உலகின் முதல் செடியில்
உலகின் முதல் பனிக்குள்

நான் பூவா? என்கிற உங்கள் குரலுக்குத்
தெரியாது என்கிற சொல்லைத் தருவேன்
கடவுளா? என்கிற ஓரப்பார்வைக்கு
இல்லை என்பேன்
அதுவொன்றும் சத்தியமாய்

அவன் காட்டிலிருந்து பெருகிவந்த ஒளி
நான் ஒளியிலிருந்து அலர்ந்து விழுந்த
ஓரு சொல்லின் இளஞ்சூடு

~
பிரபாகரன் சேரவஞ்சி

Comments