அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - ஒலிப்புத்தகம்


வருடத்திற்கு ஒரு பத்து முறையாவது இதைப் பகிர்ந்தே ஆக வேண்டிய தேவை இருக்கிறது. என்னை ஒரு முழுமனிதனாக மாற்றிக்கொள்ள உதவுகிற பாதைக்கு என்னை இட்டுச் சென்றது அண்ணல் அம்பேத்கர்.

இந்து, முஸ்லீம், கிறித்தவம் என்கிற கருத்தியலுக்கு ஏன் நீங்கள் உங்களை முழுமையாகப் பதிவு செய்து கொடுத்திருக்கிறீர்கள் ?

உங்கள் நோக்கம் சக உயிர்களுடனான அன்பின் பகிர்தலாக இருக்கிற வரையில் எதையும் நீங்கள் பற்றிக்கொள்ளலாம். எல்லாம் நலம் தான்.

ஆனால், சாதி என்கிற கருத்தியல் ஏன் உங்கள் மனதில் வன்மத்தின் குறியீடாகவே வெளிப்படுகிறது ?

தாய்மொழியின் மீதான பற்று ஏன் இன்னொரு மொழியின் மீதான வெறியாக மாறுகிறது ?

எதிலும் இரண்டு பக்க நியாயங்களைக் கருத்துக்களை கேட்டறியாமல், வாசித்துத் தெரிந்துகொள்ளாமல் வாட்சாப் வீர வசனங்களை பகிர்ந்துகொண்டு ஏன் ஒருவர் சுற்ற வேண்டும்.

என்னைப் பல சுய கேள்விகளுக்கு இட்டுச் சென்ற ஒரு ஒலிப்புத்தகம் இது. அம்பேத்கரை அறிந்துகொள்ள திறந்த முதல் சாலை இதுதான்.

நமக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது. மிகத்துரிதமான காலத்தில் வாழ்கிறோம். உரிமைகள் மறுக்கப்பட்டும், பிடுங்கப்பட்டும் கொண்டிருந்த மிகக்கொடுமையான காலத்தில் நாம் வாழவில்லை.

நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களை விட நாம் மிக வசதியாகத்தான் இருக்கிறோம் இன்றும்.

ஆனால் ஒரு பிரச்சினை காலம் காலமாக அப்படியே தான் இருக்கிறது.

வரலாறு நமக்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. நாம் அறிந்துகொள்ளாவியலாத வரலாறு தான் நமக்கெதிரான அரசியலாகத் திரும்புகிறது.

வரலாறு என்றால் என்ன?

ஒருவரை அரவணைத்ததாலா அல்லது ஒருவரது சோற்றுத்தட்டை பிடுங்கியதாலா ? எதனால் நாம் உயர்ந்தவர்கள் ? எதனால் நம் சாதி மதம் உயர்ந்தது ? எங்கிருந்து துளிர்க்கிறது நமக்குள், நாம் மட்டும் தான் புனிதம் என்கிற ஒரு மேட்டிமைத்தனம்?

உங்கள், சாதி, மதம் , அரசியல் நிலைபாடுகள் உங்களை எந்த விதத்தில் இன்னும் மேன்மையானவர்களாக மாற்றுகிறது ?

இது போன்ற கேள்விகளுக்கான பதிலை தேடி நாம் ஒவ்வொருவரும் பயணிப்பது மட்டுமே சக மனிதனை வஞ்சிக்காமல் நாம் வாழ வழிவகுக்கும்.

நாம் நாம் நம்பிக்கொண்டிருக்கும் தவறான கருத்தியல்களால் சூரையாடப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.

கருத்தியல்களை, கோட்பாடுகளை, எல்லாவற்றையும் நாம் கேள்விக்கு உட்படுத்தியாக் வேண்டும்.

எதன் மிகுதியால் நீங்களெல்லாம் மனிதர்கள் ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ?-
பல பித்த மதங்களிலே தடுமாறிப் பெருமை யழிவீரோ?

என்கிறான் பாரதி.

அறிவொன்றே தெய்வமென்கிறான்.

நீங்கள் எதனால் சிறந்த மனிதர்கள் ?

Comments