ஊர்வன பறப்பன நேரே தெய்வம்எல்லா பறவைகளுக்கும்
கடவுள் சாயல்
என்பது என் கோட்பாடு.

இல்லை ஒரு பறவை
ஆளற்ற வனத்திற்குள் உன்னை
கொத்தித் தின்னும்
என்றீர்கள்
மறுதலிப்பின்
மறுமொழியில்

இல்லை ஒரு பறவை
இருட்டில் உன் கண்ணைப்  பிடுங்குமென்றீர்கள்
ஆத்திரமாய்

இல்லை ஒரு பறவை உன்
உடல் முழுக்க
எச்சமிட்டாவது போகும் என்றீர்கள் மிடுக்கான என்
மௌனத்தால் தூண்டப்பட்டு
இந்த முறை

இல்லை பறவைகளைப் பற்றி
உனக்கென்ன தெரியும்
நீயென்ன கடவுளா
எல்லாம் தெரிவதற்கு என்றீர்கள்
கடைசியாய்

ஒரு பறவையைப் பார்க்கிறேன்
வானத்தில்
ஒரு கடவுளைக் காண்கிறேன்
அதன் சிறகடிப்பில்

தாங்கவே முடியவில்லை
உங்களுக்கு.

Comments