விலங்குப் பண்ணை புத்தகம்

விலங்குப்பண்ணை :

வெகு நாட்களாக வாசிக்க நினைத்து, இன்று ஒரு வழியாக இதற்கான நேரம் வந்து ஜார்ஜ் ஆர்வெல்லின் ANIMAL FARM (விலங்குப் பண்ணை) வாசித்தேன். இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் எடுக்கக் கூடிய விரைவான வாசிப்பு.

விலங்குப் பண்ணையொன்றில் விலங்குகள் எஜமானரின் அடக்குமுறையை எதிர்த்துப் போர் செய்கின்றன. விலங்குகள் வேலை செய்கின்றன. விலங்குகள் ஊரில் தனி இயக்கமாக உருவெடுக்கின்றன. விலங்குகள் மரணிக்கின்றன. விலங்குகள் தத்துவம் பேசுகின்றன, நகைச்சுவை செய்கின்றன. என்னெனவோ செய்கின்றன!

வாசிக்கையில் லிட்டில் ராஸ்கல்ஸ் (எனக்கு மிகமிகப் பிடித்த படம்) படத்தில் வாண்டுப் பயல்கள் கூட்டாய் சேர்ந்து  "The women haters club" என்றொரு பெண்கள் வெறுப்பு வட்டத்தை உருவாக்குவார்கள். அதில் தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள். அதைப் போல இதிலும் விலங்குகள் 7 commandments எழுதி வைத்து அதை பின் பற்றுகின்றன, மீறுகின்றன.

தத்துவார்த்தமாகவும், எளிமையாகவும், விலங்குகளை வீரதீர செயல்கள் செய்பவைகளாகவும் புனைந்தெழுதியிருக்கிறார் ஆர்வெல். 1947 இல் எழுதப்பட்ட குறுநாவல். இந்தப் புகைப்படத்தில் வரும் இதே வசனத்தை பிரபஞ்சன் ஒரு சிறுகதையில் ('மனுஷி' என்று நினைக்கிறேன்) சொல்லியிருப்பார். அதன் நினைவாக இந்தச் சொற்களையே மீண்டும் பதிவிட நினைத்தேன்.

கதையின் தொடக்கத்தில்,  மரணத் தருவாயில், விலங்குத் தலைவரின் சொற்பொழிவைக் கேட்டுத் துளிர்க்கிறது மற்ற விலங்குகளின் மனதில், புரட்சிக்கான முதல் விதை. அந்தப் பேச்சு இடம்பெறும் ஒரு பத்தி சுவாரசியமானது.

குழந்தைகளுக்குச் சொல்லக் கூடிய கதை. யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். அருமையான கதை சொல்லல், பாத்திரப் படைப்பு, அதை விட முக்கிய அம்சம் இதன் எளிமை.

Comments