பறவையின் வயது 103
~
நூற்றி மூன்று வயது நிறம்பிய
பறவை ஒன்றிருக்கிறது
எங்கள் வனத்தில்
இரவை வகிர்ந்து பகலைப்
புலரச் செய்கிற அதன் காலைக் கீச்சிடம்
நாளையும் கீச்சிடச் சொல்லி
அன்றாடம் மன்றாடும்
அருகிலிருக்கிற
ஆனை மலைவடிவு
வனத்தின் அந்தியை
வாரிச் சுருட்டி
மலையின் உச்சிக்கு
போகிற இரவெல்லாம்
மென்றுகொண்டே பறக்கும்
யாமத்தின் அமைதியைச்
சிற்சில துண்டுகளாக்கி
சிதறிய மௌனத்தில்
சிலதுண்டு காட்டுப்பூவாகும்
சிலதுளி மலைத்தேனாகும்
ஊர் அறியாது இதை
ஒருபோதும்
ஊர் அறியாது
எதையும்
கூடவே
மௌனத்தை மென்று
கீச்சிடும் இரகசியமும் தான்
ஊர் அறியாது எனினும்
காட்டிற்கும் மலைக்குமது
கண்ணுக்கு வெளிச்சம்
மலையைத் தின்று
வனத்தில் பொழியும்
வனத்தைத் தின்று
மலையில் விதைக்கும்
அனைத்தின் ஓர்
இரகசியத்தொகுப்போ
பறவைக்குள்ளே
பத்திரமாய் இருக்கிறது
பச்சை இறகின்
பக்கம் இரண்டினில்
இப்படியான
நூற்றி மூன்று வயது நிறம்பிய
அரிய இப்பறவையை அறிய
நூற்றில் மூன்றைக் கூட
அறியாத மனிதனால்
இயலாது என்பதாலோ என்னவோ
நூற்றி நான்காவது பிறந்த நாளை
சிறகடித்துச் கொண்டாடுகிறது இன்று
காடுமலை பூத்துக்குலுங்க!
Comments
Post a Comment