சங்கேதப் பறவைகளின் சங்கீதம்

சங்கேத மொழியில்
கண்ணசைத்தது
காலையில் அலைபேசின
தொல்லிய பிடியானையொன்று
அவசியமற்ற
சொற்களின் தகிப்பிற்குள்
அடைந்துகிடந்த என்னைத்
தூக்கிப் போட்டது
ஒரு காலை நேரக்
காட்டாற்றின் தீரத்தில்
மெல்லிய சங்கேதப் பிளிரலின்
பின்னணியில் புலர்ந்தது அங்கு
இன்றைய எங்கள் தொல்லாடல்
நண்பா!
மூப்பின் தொடரோட்டம்
நெருங்கிக்கொண்டிருக்கிறது
அதன் தொடுகோட்டை
இரவெல்லாம் ஒரே அயர்ச்சி
மனதெல்லாம் ஒரே யோசனை
"நண்பா!
யாருமறியாத ஓர்
இரவுக்குள் இறங்கி
மலைப்பாறை
ஒன்றாய் மாறிட வேண்டும்..
அருவியிடம் கேட்டிருக்கிறேன்
ஆனதைச் செய்கிறேன்
என்றிருக்கிறது பார்ப்போம்"
என்றது யானை
சங்கேத மொழியில்
சிரித்துவிட்டுச் சொன்னேன்
"யாருமறியா வண்ணம்
பாறைப்பிளவிலிருந்து
ஒரு யானை பிறக்க வேண்டும்
அடுத்த கணத்தில்..
மலைநதியிடம்
மன்றாடியிருக்கிறேன்
நானும் இக்கணம்.
பார்ப்போம்"
சங்கேத மொழியில்
கட்டியணைத்தது
யானை
சங்கேதப் பறவைகளின்
சங்கீதம் எங்கெங்கும்
~
பிரபாகரன் சேரவஞ்சி
Comments
Post a Comment