திருவடிகள்

திருவடிகள்
~
போக்குவரத்தின் ஒழுங்கிலேறி
இயங்கிக்கொண்டிருக்கிறது
இன்னுமிந்தக் காலம்
அதன்பாட்டுக்கு

அன்றாடத்தின்
தண்ணீர் குழாயிலேறி
அவ்வப்போது
வரும் போகும் அணில்கள்
உப்பரிகைக்கும்
உப்பரிகையிலிருந்தும்

நிறையக் கண்டிருக்கிறேன்
வருகிற அணில்களை விடப்
போகிற அணில்களின்
துள்ளலை சரசரப்பை

ஒன்றும் குறையில்லை
புதிதாய் எங்களுக்கு

என்றாலும் சிறிய இரு
கைகூப்பல்
தொழுது ஒரு
மன்றாடல்
..

மீண்டோடும்  புல்வெளியில்
தடைபட்டு ஒருமுறை நிற்றல்
முகம்திருப்பி ஒரு
முறை பார்த்தல்
அதன்பிறகு
அதன் வழியில் செல்லல்
..

உப்பரிகைப் பிள்ளைகளே!
உள்ளங்கை அணில்களே!
உம் போக்குவரத்தின் ஒழுங்கில்
இயங்கிக்கொண்டிருக்கிற
வாழ்வில்லையா இது

எந்தத் திருவடிகள்
வந்து போகுமோ
முற்றத்திற்கு
அந்தத் திருவடிகளன்றி
தெய்வமேது எங்களுக்கு?
~

புகைப்படம் : dikvanduijn

Comments