பதினான்காவது பக்க விளைவு


பதினான்காவது பக்க விளைவு
~
விதவிதமான பதிமூன்று
கவலைகளுக்கான
பதிமூன்று நிறக் குளிகைகளை
விழுங்கிய வழக்கமான இரவொன்றில்
மொட்டை மாடிக்குச் சென்றார்
மொட்டைமாடிக்காரர்

சரியாக
பதிமூன்று குளிகைகளும்
கரைந்து நீந்தத் துவங்குகிற
ஐந்தாவது நிமிடத்தில்
பக்கத்து மலையில்
ஒளியாய்த் தோன்றி
உரையாடுவார்
கவலைகளின் கடவுள்
இவரோடு

வருடத்தின் மிகக்குளிர்ந்த
நாளான இன்று
குளிகைகளின் ஆக்கக் கூறுகளில்
நடந்த சிறு மாறுதலால்
ஒரு குடிகாரனின்
வடிவில் தோன்றினார்
கடவுள்

திராட்சைமணம் கமழ்கிற
குரலில் பேசத்துவங்குகையில்
ஒரே வருத்தத்தின் வீச்சம்

"அன்பன்பான
மொட்டைமாடித் தோழரே..
நம் சக குளிகைக்காரர்கள்
நலமா?

குளிகைகள் ஒன்றுகூடுகிற
இரவுத் திருவிழாவில்
பதிமூன்று கவலைகளும்
புணர்கிற நதியின் நிசியில்
பதினான்காவதாக பிறக்கிறது
தினமும் ஒரு கவலைத்துண்டு
சற்றே மங்கிய அழுகுரலோடு

அன்றாடம் பதிமூன்றென
சராசரியாக ஒரு மண்டலம்
குளிகைகளை உட்கொள்கிறவர்களால்
45 புதுக்கவலைகள் பிறக்கின்றன 
அவர்களுக்குள் அவர்களை அறியாமல்

நண்பா..
இதை அவர்களுக்கு அறிவிக்கிற
திராணியற்றே அன்றாடம்
போதையில் திளைக்கிறேன்
இப்போதெல்லாம்
இம்மலையிலிருந்து உன்னோடு"

மறைந்த கடவுளின் நொடியவிழ்ப்பில்
மணலில் தூங்கிப்போனார் இவரும்
மலையப் பார்த்தபடி

குளிகைகளின் பிடியிலிருந்து
விடிந்த ஐந்து முப்பதுக்கு
எழுந்து கீழே சென்றார்
பதினான்காவது கவலையின்
பகட்டான மிளிரலோடு
~
Comments