நான்காவது மிடற்றின் பெருஞ்சூடுசுவையரும்புகளின் ஆயுட்காலம்
முடிந்திட்டதை அறிந்திருக்கவில்லை
சிவப்பு வண்ண எறும்பாலையைப் போலச்
சொல்லாமல் சொட்டி வெளியேறியன அரும்புகள்
ஓர் அதிகாலையில்
அவன் வலது காதிலிருந்து

எதையும் அறியாதவனாய் எழுந்து
முகம் கழுவிப் பல் தேய்க்கையில்
இனிப்பில்லை பற்பசையில்
குளியலறையிலிருந்து வெளியேறி
அமர்ந்தான் உணவு மேசையில்

சற்றே விழித்தெழுந்த
கெட்ட கனவின் முகத்துடன்
காப்பியின் முதல் மிடற்றை
அருந்தும் போதெல்லாம்
கலைந்துவிட்டிருந்தது உறக்கம்
மிகத்துல்லியமாய்

இரண்டாம் மிடற்றுக்கு
மனைவியைப் பார்த்தான்
சர்க்கரை கூட்ட

மூன்றாம் மிடற்றுக்குப்
சுவற்றை பார்த்தான்
குழப்பம் சூழ

நான்காம் மிடற்றுக்கெல்லாம்
நச்சென்று ஒரே அச்சத்தின் சூடு
சுவாசம் முழுக்க
~
சேரவஞ்சி
(
நான்காவது மிடற்றின் பெருஞ்சூடு)

Comments