குருதி நீங்கிய யட்சி


~

காட்டு விலங்குகள்
அருந்திச் செல்ல
குருதி சொரியும் ஓர்
மரத்தைத் தெரியும்
எனக்கு

பல்லூழி காலமாய் அதற்குப்
பழக்கப்பட்ட குருதிபாயும் இலைகள்
செம்மையிழந்த ஓர் பச்சையப் பொழுதில்
மண்ணுக்குள் இறங்கியது 
நிலவு ஊரறிய ஓர் இரவில்

தாய்மை பூத்து நின்ற
மரத்தின் விழுதுகளை
அணைத்துச் சொன்னது
வெண்மை பொங்கும் குரலில்

மலரோள் கண்மணியே!
மண்ணின் புது யட்சியே
மாபெரும் ஒளிகூட்ட
வந்திருக்கிறேன்
உன் மடிக்கு வா!

கட்டியணைத்துக்கொள் இக்
காட்டில் முயங்கியெனை
காம்பில் பருகிக்கொள் நீ
காலத்துக்குமான என் ஒளியை

கிளைகளுள்ள நிலவு நீ
இனி நிலத்துக்கு
அருந்து அருந்து என்னை
வாஞ்சை வாஞ்சையாய்
ஆனவரை பெற்றுக்கொள்
என் தண்ணொளியை

வேறு வடிவ
நிலவென்று ஊருக்குச்
சொல்லாதே நீ எனினும்
வேறு வண்ண
ஒளியைத் தா
விரும்பி உன் இலையை
தொடுவோர்க்கு
தகித்து உன் நிழலில்
தங்குவோர்க்கு

நீ கேட்டால் மழை பொழியும்
நீ கேட்டால் மஞ்சு மூடும்
காடே உன் கோவில் இனி
கொண்டாடு இம்மூப்பை
இனி!
~

Comments