பிரபாகரன் சேரவஞ்சி கவிதைகுருவின் ஆசிபெற்ற
ஒரு ரவையிலிருந்து
தலைசாய்த்துத்
தப்பிவிட்டேன் எப்படியோ
அது போதும்

பின் சீடர்களின்
கல்லெறிதலுக்கு
மத்தியில் ஓடி லாவகமாய்
அமர்ந்துகொண்டேன்
சரியான ஒரு மறைவைத் தேடி

வீடடைந்தால்
சன்னலுக்குள் நீளும்
ஒரு கம்புக்குப்
பணிய வைத்தார்கள்
பவ்வியமாய்

உடைக்கப்படும்
கதவுகளுக்குள்ளிருந்து
வண்ண வண்ணப் பொட்டிட்டுக்கொண்டால் போதும்
பிழைக்கலாம் என்றார்கள்
நெற்றியில்

பல கதைகளின் இசைமயமான
தலைப்பைத் துதிக்கவேண்டும் என்றார்கள் நூற்றியெட்டு முறை

சப்தமாய் கதவை
உடைத்துக்கொண்டே

எல்லா வண்ணங்களையும்
ஏற்றுக்கொள்கிற வெண்மைதான்
என் வீட்டுக் கொடியின் துணி
என்பதாலே
ஏறி ஏற்றினார்கள் இருவர்
குருதி வண்ணத்தை
அதில் ஏனோ

மண்டியிட்டுப்
பிரார்த்திக்கிறேன்
நான் உலகத்திடம்
வக்கற்றுக் கடைசியாய்
அதன் அமைதிக்காக

இந்தக் கதவு உடைக்கப்பட்டால்
அந்தப் பொழுதில் கட்டிடம் வீழ்ந்தால்
எனக்கும் அவர்களுக்கும் ஒரே கொடி
எனக்கும் அவர்களுக்கும் ஒரே நிழல்
எனக்கும் அவர்களுக்கும் ஒரே குரு
எனக்கும் அவர்களுக்கும் ஒரே மௌனம்
~

சேரவஞ்சி

*ரவை- ஈயக்குண்டு/தோட்டா
(குருவின் ஆசிபெற்ற ரவைகள்)

Comments