பசி

இளைப்பாறுதலின்
சிறு கீற்றை வகிர்ந்துண்கிறேன்
எனக்கான மரத்தடியில்
மண்துகள்களூதி

நிழலாய்ப் பின் தொடர்கிறது
வெயிலில்
நான் உண்டு களித்த
தித்திப்பின் கனித்துண்டுகள்

பிடித்த திசையில்
பிடித்த வடிவில்
மாற்றிக்கொள்கிறது தன்னை
சுற்றிச் சுற்றி
அதன்போக்கிற்கு
அடிக்கடி

அயர்ச்சியுறாத நடையின்
மேல் ஏறியிருக்கிற
சூட்டை அறியாதவர்
போன்றோரு சாயலில்
எதிர்ப்படுகிறீர்கள்
என் வழியில்

சற்று அமரலாம்
என்று தான் நினைத்தேன்
சுடும் பாதங்களோடு
வருகிற உங்களோடு
ஒரு மரத்தின் நிழலில்

ஆறுதலின் பெரிய துண்டொன்றைப்
பார்க்கச் செல்வதாகவும்
அக்கரையோடு
அதன் பெயர் இரவென்றும்
அழைத்தீர்கள்
உடன்வரச்சொல்லி
அதற்குள் நீங்களே

நல்லது சந்திப்போம் என்று
சாலைக்குத் தாவினேன்

உள்ளுக்குள் உலர்ந்திருந்த
எஞ்சிய கனிச்சுவையோ
சன்னக்குரலெடுத்துச்
சொல்லாமல் இல்லை

"பெரிய துண்டை உண்டு உறங்குதல்
உங்கள் பசி
சிரிய துண்டை உண்டு நடத்தல்
எந்தன் பசி"

~

சேரவஞ்சி கவிதைகள்

Comments