மீட்பரின் ரொட்டித்துண்டு


மீட்பரின் ரொட்டித்துண்டு
~இறுதிப் பயணம் தான்
எனினும் தொண்டையில்
சிக்கிக்கொண்டது
பையில் மீதமிருந்த
ஒரே ஒரு ரொட்டித்துண்டின் நினைவு
வழித்துணைப் பெரியவரை
அன்பு செய்தேன்
பாதை முழுக்க
தேவதைகளை மன்றாடினேன்
உச்சியை அடைந்ததும்
ஒற்றைத் துண்டு இரகசியத்தைக்
கட்டுடைக்காமலிருக்க
பேசிக்கொண்டே
நடந்தார் பனி சூழ
கீழ் மலையில் மேயவிட்ட
ஆட்டுக்கதைகளை
மூச்சிறைக்க உச்சியை எட்டி
ஓர் பாறையில் அமர்ந்ததும்
சொன்னார் இதை
மஞ்சு போர்த்திய தண் குரலில்
"அப்பா!பசித்திருக்கிறது மலை
என்றையும் போல இன்றும்
யாராவது வரவேண்டியிருக்கிறது காலையில்
இதன் அமைதியைக் கலைத்துப்போட
எல்லோரும் கலைய வேண்டியிருக்கிறது அந்தியில்
இதன் அமைதியை மீள்சூட்ட
தாமரைத் தடாகம் ஒன்றுண்டு இங்கு
அள்ளிப் பருகுங்கள் ஆன வரைக்கும்
காட்டுக் கிழங்குண்டு அந்தப்பக்கம்
பசிக்கு உணவாகும்
ஆடுகள் காத்திருக்கும் மீள்கிறேன்
மாலைக்குள் வந்தால்
இரவுக்குள் செல்லாம் கீழே
காத்திருப்பேன்!"
சரிவில் நடந்து தொலைவில் மறைந்தார்
சற்றே பிட்ட ஒரு
ரொட்டித் துண்டின் வடிவில்
~

Comments