குரங்குகளும் ஏழு முடிச்சுக்களும்

குரங்குகளும் ஏழு முடிச்சுக்களும்

~
ஏழு முடிச்சுக்களிட்டுக்
கழுத்தில் தன் வாலைச்
சுற்றிக்கொண்ட
ஒரு குரங்கைக்
கண்டேன்
தலைகீழாய் அது
மரத்தில் தொங்கிக்
கொண்டிருக்கையில்

ஒவ்வொரு சுற்றும்
ஒவ்வொரு முடிச்சும்
ஒவ்வொரு துயரென்று
வர்ணித்துக்கொண்டிருந்தது
நிழலுக்கு ஒதுங்கிய
என்னிடம்

துக்கம் பீடித்த
தொண்டையுடன்
எத்தனித்தேன்
ஏதோவொரு கேள்வியைக் கேட்க

மின்னும் கண்ணீருடன்
அவிழ்த்துக்கொண்டிருந்தது
மெல்ல மெல்ல
ஒவ்வொரு முடிச்சாய்

போட்டுவிட்டவர்களே
அவிழ்த்தும்விடுகிறதைப் போலோரு
முடிச்சவிழ்ப்பின் லாவகம்
அதன் கைவிரல்களில்

தலைசாய்த்துக்கொண்டேன்
சந்தேகம் தோய்ந்த
சன்னதம் சூழ்ந்தது
முகத்தை

"என்ன பார்க்கிறாய்?
நிழலுக்கு ஒதுங்குகிறவர்கள்
மரத்தின் வழக்குகளுக்கு
மத்தியஸ்தம் பார்க்கக்கூடாது"

ஓங்கிச் சிரித்தது
ஞானத்தின் வெயில் குரல்

~

Comments