சேரவஞ்சி கவிதைகள்
ஆக மொத்தத்தில்
நமக்கிடையில் எந்தவொரு
வார்த்தைகளுமில்லை
என்பதைப் போலொரு
மகிழ்ச்சியில்லை
சொற்களின் எடையை
அதன் தரிசனத்தை
அதன் தீயைக் குளிரை
புரிந்துகொள்ளமுடிவது
ஒருவிதத்தில் வாதை
சொற்களின் சதிராட்டத்தை
தாங்குகிற மேடையை
உயிரின் அஸ்திவாரத்தில்
கட்டி எழுப்புவது
வாழ்நாள் செயல்திட்டம்
அதுவொரு முடிவற்ற பணி
போதுமான வசதி கிடைத்தாலும் கட்டிமுடிக்கப் பிரியமற்ற ஒரு
காலவரையற்ற அலுவல்
இன்னும் காட்டு மிருகங்களிலிருந்து வெளியேற எத்தனிக்காதவைகளுக்கு
காட்டில் பள்ளி கட்டி
என்ன பிரயோசனம் சொல்?
சொல்லிலிருந்து பிரிந்து
சொல்லிலிருந்து உராய்ந்து
சொல்லிலிருந்து உடைந்து
சொல்லிலிருந்து நழுவி
ஏதேனும் ஒரு
விரைவுப்பாதையில்
குறுக்குவழியில்
ஈர்ப்புவிசையில்
மௌனத்துக்குள் விழுகிற
உன்னை தழுவிக்கொள்கிறேன்
வாஞ்சைவீசுகிற
என் தோள்களின் மேல்
வேகவேகமாய்
ஆக மொத்தத்தில்
நமக்கிடையில் எந்தவொரு
வார்த்தைகளுமில்லை
என்பதைப் போலொரு
மகிழ்ச்சியில்லை
எப்போதும்
~
சேரவஞ்சி
Comments
Post a Comment