சேரவஞ்சி கவிதைகள்

ஒரே பறத்தலில்
பதிமூன்றாயிரம் கிலோமீட்டருக்குப்
பறந்து செல்கையில் என்
சிறகின் திறனை
வாடகைக்கு விட்டிருந்தேன்
உங்கள் கற்பனைக்கு


பதிமூன்றாயிரம் கிலோமீட்டர்கள்
எதற்குப் பறக்க வேண்டும்
பக்கத்தில் இரை தேடக் கூடாதா
என்று என் தாய்ப்பறவையோடு
சண்டையிட்டுக்கொண்டிருந்தீர்கள்
நான் தென்படாத வானத்தின்
தொலைவை உறுதிப்படுத்திக்கொண்டு

உண்மையில்
இரண்டு கிலோமீட்டருக்குள்
இரை தேடிப் பசியாறுகிற
குருவிகளின் சிறகுகள்
எனக்கில்லை

நான் விரும்பிப் விரும்பிப்
பொருத்திக்கொண்டது
முகில்த் துண்டுகளிலிருந்து
இழைத்தெடுத்த வானவண்ணச் சிறகுகள்

கடல்கள் அண்ணாந்தும்
மலைகள் காடுகள் பக்கவாட்டிலும்
பார்த்து ரசிக்கிற பயணம் எனது

ஆனாலும் உங்கள் முன்
தரையிறங்குகையில்
பறக்கத் தெரியாததைப் போல்
நொடித்து விழுவேன்
நீங்கள் மகிழ்ந்திருக்க
என் குஞ்சுப்பறவைகளின் தலைமீதே

குருவிகளின் சிறகுகளின் திறனை
பரிகசிக்கப் பிறப்பதில்லை
ஆல்பட்ராஸ்கள்

~

சேரவஞ்சி

Comments