சேரவஞ்சி கவிதைகள்
அழகாயிருந்த காரணத்திற்காகக்
கூண்டோடு அழிக்கப்பட்ட
ஒரு பறவையினத்தின்
பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தலில்
ஏன் அழவேயில்லை என்று என்னைக் கேட்டார்கள்


ஒரு மரித்த பறவையை உயிர்ப்பிக்கும்
மந்திரம் எனக்குத் தெரியாது
கூடுதல் நாட்களெனும்
அளவைக் கற்களைச் சேர்த்து
ஆண்டுகளின் மேல் வைக்க வைக்க
அவமானத்தால் உந்தப்பட்டு
மௌனப் பள்ளத்தாக்கில்
சரிந்து கீழிறங்குகிறேன்

இத்தனைக்கும்
அந்தப் பறவையின் பெயரைத் தான்
என் தாத்தா எனக்கும் வைத்தார்
என்று நான் உங்களிடம் சொன்னதில்லை

என்னிடம் நீங்கள் கேட்கும் கேள்விக்கு
நான் நினைவில் ஏந்தும்
அவமானத்திலிருந்து
இரண்டு உருண்டையும்
ஒன்றுக்கும் உதவாத
என் மௌனத்திலிருந்து
இரண்டு உருண்டையும்
சேர்த்து உருட்டித் தரட்டுமா
உங்கள் கைகளில்?
தந்தால் ஒரு பறவை மீளுமா?

~
சேரவஞ்சி

Comments