ஓஷோ பரிந்துரைத்த புத்தகங்கள்ஓஷோ நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பரிந்துரை செய்திருக்கிறார். இந்த வாரத் தொடக்கத்தில் அவருடைய BOOKS I HAVE LOVED. வாசித்தேன். என் வாழ்வின் மிக முக்கியமான நாள் அது. 

ஓஷோ ஒரு காணொளியில் சொல்வார்,  "நாங்கள் முதலில் வீட்டில் ஒரு பகுதியை நூலகமாய் வைத்திருந்தோம். பின்பு நாளடைவில் நூலகத்தில் ஒரு பகுதியாக வீடு ஆனதென்று". அந்தக் காணொளியில் அவருடைய 150000 பிரத்தியேகமான நூல்களைப் பார்த்ததே மிகப்பெரிய ஆன்மீக அனுபவம். ஓஷோ பரிந்துரைத்த புத்தகங்களை வாசித்து முடிக்க ஜென்மம் வேண்டும் போலத் தோன்றுகிறது. 

அதி விரைவில் புத்தனாகிவிடுவார் என்று ஓஷோ பரிந்துரைத்த ஆலன் வாட்சின் The Book புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன்.. ஒரே ஒரு வரிக்கு மேல் செல்ல இயலவில்லை. தத்துவத்தின் ஆழம் அத்தகையது. புத்தகங்கள் என்றால் இப்படித்தானே இருக்க வேண்டும். 

ஊருக்குத் திரும்பும் நாளில் ஓஷோ பரிந்துரைத்த எல்லா புத்தகங்களின் பிரதியையும் வாங்கி வீட்டில் வைப்பேன். நான் வாசிக்கிறேனோ இல்லையோ வீட்டில் இருக்கிறவர்கள் வாசிப்பார்கள். வசதியான எந்தப் பொருட்களின் மீதும் எந்த ஈர்ப்பும் எனக்கு இருந்ததில்லை. எப்போதாவது ஒரு நாள் தங்க நகைகள் போட்டுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிற நாளில், சற்று நேரம் போட்டுக்கொண்டு அதைக் கழற்றி வைக்கும் பொழுதை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். 

என் வேலைக்காக நான் சிரமப்பட்டு  சிலவற்றை வாங்கியிருக்கிறேன். அவற்றை எல்லாம் கழித்துவிட்டால் என் மிகப்பெரிய சொத்து என் புத்தகங்கள் தான். ஐநூறு புத்தகங்கள் இருந்தாலும் அதுமட்டும் தான் நிரந்தரமான செல்வம். 

சமீபத்தில் ஓஷோவின் புத்தகத்தைப் படித்துவிட்டு (என்ன படித்தார், எப்படிப் படித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்) சைக்கோ மாதிரி ஆகிவிட்டேன் என்றொருவர் பேஸ்புக்கில் பேசிக்கொண்டிருந்தார். How pity! 

The man who does not read has no advantage over the man who cannot read.

ஒஷோவைப் பற்றிப் பேச, விமர்சிக்க முதலில் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அந்த 150000 புத்தகங்களைக் கொண்ட நூலகத்திலிருக்கும் தலைப்புகளையாவது ஒரு முறை வாசித்துவிட்டு, கண்ணாலாவது ஒரு முறை பார்த்துவிட்டு பின் பேசினால் காது கொடுத்துக் கேட்கலாம்.

வாய் சும்மா இருக்கிறதே என்று பேசுவதும். கை சும்மா இருக்கிறதே என்று எதையாவது கிறுக்குவதும்  நோய், நண்பர்களே. 

"சும்மா இருக்கும் சுகம் ஒன்றறியேன் பராபரமே" என்கிறார் தாயுமானவர்

"சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே"

என்கிறார் அருணகிரிநாதர் 

"பயனில சொல்லாமை, சொல்வன்மை" என்று இரு அதிகாரத்தையே வைத்திருக்கிறார் வள்ளுவர். 

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று 
(641)

என்கிறார்.
~

A tongue that rightly speaks the right is greatest gain, It stands alone midst goodly things that men obtain.

நாநலம் பேஸ்புக்கில் யாவர்க்கும் யாவர்க்கும் அமைக!

 Comments