கமலும் பத்மாசுப்ரமணியமும்

நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள் சென்ற வாரம் ஒரு கருத்தைச் சொன்னார். அதைப் பற்றிப்  பேச, விவாதிக்க, மனு கொடுக்க யாரும் இல்லை.
 
வர்ணாசிரமம் பேசுகிற குலத்தொழிலை அவரவர் சரியாகச் செய்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது என்றார். அவரது கலையைப் பற்றி ஏதொரு குறையும் சொல்வதற்கு இங்கு யாருக்கும் ஒன்றுமில்லை. அதில் அவர் கைதேர்ந்த மேதை. 

ஆனால் இந்தக் குலத்தொழில் குறித்த கருத்து ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு எதிரான கருத்து என்று இந்த காலத்திலுமா இவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்? வேதனை. 

யார் என்ன வேலை/தொழில் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அவரவர்தானே அன்றி , வர்ணம் , கோத்திரத்தைப் பற்றிப் புகழுறை வழங்குகிற எந்தப் புராணங்களோ, இதிகாசங்களோ, பழைய கடவுள் உரைகளோ அல்ல. 

சமீபத்தில் தியாகராஜர் பற்றிக் கமல் பேசியதற்கக் கொதித்த நல்ல உள்ளங்கள் பத்மா சுப்பிரமணியன் அவர்களின் கருத்தையும் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் ஆன்லைனில் தானே வந்தது. கமல் பேசியது எதோ ஒரு விதத்தில் தவறென்று உணர்கிறவர்கள், Change Org மனு ஒன்றை உருவாக்கி ஆயிரமாயிரம் பேருக்குப் பகிர்ந்து கையொப்பமிடச் செய்கிறவர்கள் பத்மா சுப்பிரமணியம் பேசிய கருத்துக்கு என்ன மதிப்புறை வழங்கத் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்கிற ஆர்வம் எனக்கிருக்கிறது. அதற்காக எதுவும் Change Org மனு உருவாக்கப்பட்டது போல் தெரியவில்லை.

நடனக் கலைஞரின் கருத்தை நீங்கள் வழிமொழிந்து ஏற்கிறீர்கள் என்றால் உங்களிடம் எதைப் பேசி வாதிட்டும் யாருக்கும் பயனில்லை. நேர விரயம். நண்பர்களே, அவரவர் அவரவருடைய குலத்தொழிலைத் தான் செய்ய வேண்டுமென்கிற மன நிலை இன்னமும் இதை வாசிக்கிற யாருக்காவது உண்டெனில் மன்னிக்க, மனித குலத்திற்கு எதிரான, மிகவும் ஆபத்தான தற்கால மனிதர்கள் நீங்கள் தான். 

உலகமே நோயச்சத்தின் உச்சத்தில் உழன்றுகொண்டிருக்கும் பதற்றமான இச்சூழலில், சமூக ஊடகங்களில் நாம் யார் மனத்திலும் வன்மத்தை விதைக்கக் கூடாது என்று நாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில்தான் மனிதத்தை விட வர்ணத்தைத் தூக்கிப் பிடிக்கிற வேலைகள் தரமான ஒரு கள்ள மௌனத்தோடு, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல நைச்சியமாக நடந்து கொண்டிருக்கின்றது. 

சக மனிதனை உயர்வு தாழ்வற்ற நண்பனாகப் பார்க்கும், நேசிக்கும், மதிக்கும் நல்ல தற்காலப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி அந்த கருத்தியலை ஏற்றுக்கொண்டு வாருங்கள் நண்பர்களே, இந்த சமூகத்திற்கு உதவியாய் இருப்போம். மாறாக யாரையாவது மட்டம் தட்டிக்கொண்டே இருப்பது ஒருபோதும் நம் யாரையும் புனிதராக்காது. நாமெல்லாம் தற்காலத்தில் வாழ்கிறோம்.  எதையும் விட தற்காலத்திற்கேற்றார் போல் வெளிப்படைத்தன்மையோடு வாழ்வதும், சகோதரத்துவம் பேணுவதும் முக்கியம்.

மனிதனுக்கு மனிதன் ஆறுதலாய், உதவியாயிருக்க வேண்டிய நேரத்தில் சமூக ஊடகங்களில் பஞ்சாயத்துக்களைத் தவிர்க்க வேண்டுமென்பது தான் என் மன நிலையும். ஆனால் என் மௌனத்தால் தான் இந்த நேரத்தில் மிகக் காயப்படுகிறேன் என்பதால் இதை எழுதித் தீர்க்க வேண்டியிருக்கிறது. 

பிரபஞ்சன் தன் "நான் இருக்கிறேன்" சிறுகதையில் சொல்வார்.

"இதைக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று  கேட்காதீர்கள். தயவு செய்து கேட்காதீர்கள். மனிதனாக  இருப்பதால் தான் கேட்க வேண்டியிருக்கிறது"

Comments