கு.அழகிரிசாமி சிறுகதைகள்புத்தகங்களும் அன்பளிப்பும்
~
கு.அழகிரிசாமியை மனதிற்கு மிக மிக நெருக்கமாக உணரத் தொடங்கியது "அன்பளிப்பு" சிறுகதையிலிருந்து தான். நேற்று ஒரு பதிவில், புத்தகங்களை இரவல் தருவது பற்றி நடந்த ஓர் உரையாடலில் களமாடுகையில் இதைச் சொன்னேன். 

பெரும்பாலும் புத்தகங்களைத் தருகிற பெரிய மனது எனக்கு இருப்பதில்லை. புத்தகங்களைப் பெறுகிறவர்கள் காப்பித் தூள் கடனாக வாங்கிப் போவதைப் போல் தேமே என்று வாங்கிப் போகாமல் அந்தக் கதையைப் பற்றியோ, எழுத்தாளரைப் பற்றியோ ஒரு வரியாவது நம்மிடம் ஏதேனும் கேட்க  மாட்டார்களா என்று எதிர்பார்ப்பேன். ஒரு புத்தகத்தைப் பரிந்துரைத்து அவர்களுக்கு வாசிக்கத் தருவது நமக்கு அந்தப் புத்தகம் தந்த அனுபவத்தில் கொஞ்சமாவது இவர்களுக்கும் வாய்க்காதா என்கிற ஒரு ஆதங்கம் தான். பலர் புத்தகத்தைப் பிரித்துக் கூடப் பார்க்காதவர்களாக மூன்று மாதங்களுக்குப் பின் திருப்பித் தருவார்கள். இன்னொரு கூட்டம் உண்டு. நம்மிடம் இதை வாசித்துவிட்டீர்களா என்று ஒரு பேச்சுக்குக் கூட கேட்காமல் அதை எடுத்துக்கொண்டு போய் வைத்துக்கொள்கிற கோஷ்ட்டி. 

உண்மையில் நான் புத்தகங்களை இரவல் தர விரும்புகிறவன் தான். குறிப்பாக சிறுவர்களுக்கு. தெருவில் வசிக்கிற குழந்தைகளுக்குச் சின்னச் சின்னப் புத்தகங்களை வாசிக்கத் தந்து அவர்கள் அதை வாசித்ததும் அவர்களோடு ஒரு உரையாடல் நடத்த எப்போதும் விரும்புவேன். ஊருக்குத் திரும்ப வந்ததும் நான் எங்கிருந்தாலும் என் சுற்றத்தை அப்படி ஓர் இடமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன். நான் வாழ நினைக்கிற இடமெல்லாம் மற்றும் வாழ்க்கை எல்லாம் கு.அழகிரிசாமி தன் அன்பளிப்பு சிறுகதையில் எழுதிக் காட்டியிருக்கிற அதே வாழ்க்கையைத் தான். 

அதுதான் உண்மையில் வாழ்க்கை.


Comments