பிந்து மாலினியும் எம்.டி.பல்லவியும்இசைப்பறவைகள்
~
"ஊர்வன பறப்பன நேரே தெய்வம்" என்பான் பாரதி.

தான் தரிசிக்கிற அனைத்தையும் கடவுளாக்குகிற சக்தி கவிஞனுக்குத் தான் உண்டு.

மனம் தெய்வம். சித்தம் தெய்வம்.உயிர் தெய்வம்.காடு,மலை, அருவி,ஆறு,கடல்,நிலம்,நீர்,காற்று,தீ,வான், ஞாயிறு,திங்கள்,வானத்துச் சுடர்கள் -எல்லாம் தெய்வங்கள்.

என்றான்.

எல்லாவற்றையும் தெய்வங்கள் என்றான். ஆனால் பறவைகளைக் குறித்தும், ஊர்வன குறித்தும் உங்கள் மனதில் சற்றும் சிறிய குறைபாடு எழுந்துவிடக்கூடாதென்று தான் அவை "நேரே தெய்வம் என்றான்". மற்ற எல்லாமும் தெய்வம் தான். ஆனால் பறவைகள் அதிலும் ஒரு படி உயர்ந்து நிற்கிற ஜீவராசிகள். 

பறவைகளிடமிருந்து மனித இனம் பெற்றுக்கொண்ட கொடை அளவற்றது.ஓர் அதிகாலையை தன் குரலெடுத்து மலர்த்திவிடும் ஒவ்வொரு பறவையினத்தையும் அதன் கீச்சுக்களையும் அதன் அழைப்பொலியின் அன்பொழுகும் லயத்தையும் முறையே அறிந்து வழிபடுகிறவர்களுக்கும், இந்த வாழ்வின் எல்லா நல்லிசையும் அவர்களின் வாசற் கதவைத் தட்டும். 

மனிதர்களிலும் சிலருக்கு அந்தப் பறவைக்குரல்கள் உண்டு. பாடுகிறவர்கள் எல்லோருக்கும் வாய்த்திடுவதில்லை பறவைக் குரல்கள். தற்கால இசைக்குயில்களில் பாம்பே ஜெயஶ்ரீயில் தொடங்கி , சித்தாரா, எம்.டி.பல்லவி, அனன்யா பட் என்று நீள்கிற இந்தப் இசைப்பறவைகளின் பட்டியலில் பிந்து மாலினிக்கு ஒரு நிரந்தரமான இடம் உண்டு. என் நரம்பிழைகளைக் கற்றையிட்டு ஓர் கூடு கட்டினால் அது இந்தப் பறவைகளின் குரல் எதிரொலிக்கும் ஒரு பெருவனமாக உருப்பெரும். 

பிந்துவும், எம்.டி.பல்லவியும் இணைந்து ஓர் இசை நிகழ்ச்சியை இரண்டாண்டுகளுக்கு முன் நடத்தியிருக்கிறார்கள். அதை நேற்று முழுமையாகப் பார்த்தேன். பார்த்தேனெனில் கண்களைப் பின்வாங்க முடியாத ஒரே முழுவீச்சில் முழுமையாகப் பார்த்து முடித்தேன் என்று பொருள்.இந்த இசை நிகழ்ச்சிக்கான இவர்களின் தயாரிப்பு, உழைப்பு மிகப்பெரியது. மிக உன்னதமானது. அதை இந்நிகழ்ச்சி முழுவதையும் பார்த்து முடிக்கிற தருணத்தில் நீங்கள் முழுமையாக உணரவியலும்.

ஊர்வன பறப்பன பற்றி கட்டுரை எழுதாமல், "அவை நேரே தெய்வம்" என்றான் பாரதி.

நான் என் மனிதிற்கினிய இந்த இசைப் பறவைகளை பாரதியின் சொற்களிலேயே வழிமொழிந்து உங்களுக்குக் காட்டித் தருகிறேன்

இவர்கள் நேரே தெய்வங்கள். 
வரம் வேண்டுவோர் இவர்களின் குரல்களுக்குள் சரணடைந்து கொள்ளுங்கள்.


Comments