சேரவஞ்சி கவிதைகள்
என்னிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?
முப்பத்தி நாலாயிரத்தி நானுற்றி
எழுபத்தி ஐந்து கோடிப் பிரச்சினைகளைக்கும்
பஞ்சாயத்துப் பண்ணுகிற
மூன்று வேளையும் சொல்லத்தகுந்த
ஸ்தோத்திரங்கள் என்னிடம் இல்லை
என்னிடம் ஸ்தோத்திரங்கள் இல்லை
என்பதைப் போல் ஒரு ஆறுதல் இல்லை
ஒரு பறவை உங்கள் வீட்டு முற்றத்திற்குப்
பசியாற வந்துகொண்டிருக்கிற வரை
அதன்பாட்டுக்கு ஒரு காலை புலர்ந்து
ஆரஞ்சு நிறத்தில் உங்கள்
அறைக்குள் சரிகிற வரை
வெயில் அப்பிய நாளின் அயர்ச்சியை
மழை வந்து கழுவுகிற மாலையொன்று
உங்கள் கைவசம் இருக்கிற வரை
ராத்திரி மழை எப்போதும் உங்கள்
குழந்தைகளை நனைக்காத வரை
கனியும் பூவும் கருணையாய்த் தருகிற
வீட்டுச் செடிகள் சிரிக்கிற வரை
நான் நிச்சயம் ஆறுதலாயிருப்பேன்
ஸ்தோத்திரங்கள் கடனாய்க் கேட்காத
கடவுள்கள் பிரசன்னமாகும்
வாசல்கள் சன்னல்கள்
எத்தனை எத்தனை
~
சேரவஞ்சி

Comments