சேரவஞ்சி கவிதைகள்
பயணிகளின் கனிவான யாத்திரைக்காக
தன் கைப்படப் பிரசுரித்த
கடவுளின் கையேட்டில்
மூன்று பகுதிகள் நூறு பக்கங்கள்
“எது உண்மையோ அதுவே என் கிழக்கு
எது உண்மையோ அதுவே என் மேற்கும்
எதற்கஞ்சுகிறாய் நீ
எல்லாத் திசையும் எனதே நட”
என்று தொடங்குகிற முதல் பக்கத்திலிருந்து
சுழல்கிற சக்கரங்கள் முப்பத்தி மூன்றாவது
பக்கத்தில் போடப்பட்டிருந்த
ஒரு டீக்கடையின்
பெஞ்சிலிருந்து எழுந்து செல்கிற
மூதாட்டியின் சொற்களோடு முடிகிறது இப்படி
“உண்மையை நீ அடையும் நாளில்
அதை ஊருக்கு அறிவிக்க உனக்கு மௌனமே அருளப்படும்
அதை நீ போதுமென்றால் நீ ஆள்வதற்கெனப் பின்னொரு
ராஜ்ஜியம் அருளப்படும்”
காகித வண்ணத்தில் மறைக்கப்பட்ட
கடைசி இரண்டு வரிகள் பயணத்தின்
முடிவில்தான் வெளிச்சமாகுமாம்
தொடர்ந்து நடந்தால்
அடுத்த முப்பதாவது பக்கத்தின் முடிவில்
ஒரு மதிய உணவு விடுதி வாசலில்
நிற்க வேண்டியிருந்தது
பெயர்ப் பலகையின் கீழ்
குறிப்பிடப்பட்ட ஒரு
நிலைத்தகவலை நான் வாசிக்கையில்
சந்தன வாடை அப்பிய
சக பயணி ஒருவர் கடந்து போனார்
மெல்லிய என் குரலை
“அன்பர் பசி அளவிலாதது
முழுமையாகப் பசியாறுவதற்கான
முதல் வழி
முழுமையாகப் பசியாற்றுவது”
சந்தியொளி சரியாகக்
காகிதத்தில் விழுகையில்
தொண்ணூற்று ஒன்பதாவது பக்கத்திலிருந்த
யாருமற்ற ஊரின் மையத்தில் நின்றிருந்தேன்
நூறாவது பக்கத்தில் போய்ச் சேர வேண்டிய இடத்தை
எதிர்பார்த்துத் திருப்புகையில்
அதில் குறிப்பிட்டிருந்தது இப்படி
“பயணமே போய்ச்
சேர வேண்டிய இடமும்
பயணமே பக்தர் வாழும் கோவிலும்
இருக்கிற இடத்தில்
அமைதியில் உறங்கு”
~
சேரவஞ்சி
(பயணிகளின் கனிவான கவனத்திற்கு)
Comments
Post a Comment