பெயரற்ற பூவைச் சூடிக்கொள்தல்
வெட்டப்படாத 
தாய் மரங்களின் கனிச்சுவையில்
நானொரு சொட்டு நீர்மை

வேட்டையாடப்படாத 
மிருகங்களின் கானுலகத் தடங்களில்
விதையுண்ணும் அணிற்பற்கள்

சுட்டு வீழ்த்தப்படாத
பறவைகளின் கீச்சினுள்
நானொரு இசைக்குறிப்பு

தோண்டப்படாத ஆதிமண்ணில்
வாடைமிகு கனிமத்துகள்

மரிக்காத மனிதமனத்துள்
மீச்சிறு செங்கருணைத்துளி

வளிமப் புகைமண்டிய எற்பாட்டு வானில்
பசுக்கள் சுவாசித்த தூயவுயிர்வளி

யாவற்றின் முதலிலிருந்ததும்
யாவற்றின் முடிவிலிருந்தும்
கொஞ்சம் பிட்டுப் பார்த்தால் 
நானதில் எட்டிப்பார்ப்பேன் 

கவலை வேண்டாம்
பெயரற்றுப் பூத்திருப்பேன்
நீங்கள் பகிர்ந்துகொள்ள ஏதுவாக

எடுத்துச் சூடுங்கள் 
என்னை ஒரு வாகாய்
நான் மணந்து வீசுவேன்
உங்கள் அகமுற்றத்தில்

பூவென்றால் காற்றென்றால் 
மணக்கவும் வீசவும்
இறைஞ்சத் தேவையில்லை யாரும்
அதனிடம்

சூடிக்கொள்தலை நினைத்தால் போதும்
சுவாசித்தலை நினைத்தால் போதும்
பூரண பலனுண்டு

~
சேரவஞ்சி


Comments