ஆம்வே பரிதாபங்கள்


ஆம்வே வடைகள்


இதை வெகு நாட்களாக போகிற போக்கிலாவது சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று நினைத்தேன். சமீபத்தில் டிரான்ஸ் படம் பார்க்கையில் கூட எழுதலாம் என்று நினைத்தேன். Not worth writing என்று தோன்றியதால் எழுதவில்லை. இன்று நண்பர் வெங்கட் பிரசன்னாவின் அனுபவத்திற்குப் பிறகு இதை எழுதத்தான் வேண்டுமோ என்று நேரம் செலவழித்து எழுதுகிறேன்.

ஒரு நாள் பார்ன்ஸ் அண்ட் நோபில்ஸ் புத்தகக் கடையின் தொழில்/பொருளாதாரப் பிரிவில் நின்று புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். ஒருவர் வந்தார்,தமிழா ? புத்தகம் வாசிப்பீர்கள் போலிருக்கிறதே என்று ஆரம்பித்து, பரியேறும் பெருமாள் பிடிக்கும், அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார். நானும் சரி யாரோ நல்ல மனிதர் போலிருக்கிறதே என்று பேச்சுக்கொடுத்தேன். கிட்டதட்ட பதினைந்து நிமிடம், விடாமல் செய்துவிட்டார். மகத்தான உருட்டல்.

சரி வணக்கம் தலைவரே என்று விலகிக்கொண்டு, "யப்பா சாமி" என்று Non Fiction பக்கம் சென்றேன், அங்கு சச்சின் டெண்டுல்கர் ஒரு பழைய அரை டவுசரை அணிந்துகொண்டு பேரகான் செருப்புக்கால்களோடு வந்ததைப் போல ஒரு தோற்றத்தில் ஒருவர் வந்து பக்கத்தில் நின்று புத்தகங்களைப் பார்க்கிறதைப் போல என்னிடம், 

"ஷூ நைஸ்... இசீட் நைக்கி? " என்றார். ஆமாம். என்ன ஷீ ? ரன்னிங் ஆர் ஜாகிங் என்றார்? ஜாகிங் என்றேன். கனவில் கூட அமெரிக்காவில் நடந்ததில்லை. எங்கே ஓடுவீர்கள் இந்தப் பக்கம் ஓடுவதற்கு இடம் இருக்கிறதா என்று ஆரம்பித்து வீடு எங்கே இருக்கிறது வரைக்கும் கேட்டார். எல்லாவற்றுக்கும் பொய் சொன்னேன். அனேகமான என் வாழ்நாளில் ஒரு நூற்றி முப்பத்தி நான்கு கேள்விகளுக்கு சரமாரியாக பொய் சொன்னேன் என்றால் அது அன்றைக்குத் தான். சில பேரிடம் பொய் பேசுவது தான் நம்மை ஞானத்திற்கு அழைத்துச் செல்கிறது.

அன்றைக்கு நான் சொன்ன நூற்றி முப்பத்தி நான்கு பொய்களையும் பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தவர் ஶ்ரீநிதி தான். "அடப்பாவி மெய் மெய்யப்பனா பொய் பொய்யப்பன்னு வெச்சுக்கோ என்ன இப்டி பொய் சொல்ற?" என்பதைப் போல் பார்த்தார். அவருக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஏற்கனவே " எக்ஸ்க்யூஸ்மீ , சார் பார் த டிஸ்டபன்ஸ் , இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா ?" என்று ஒரு கோஷ்ட்டியிடம் ஓடிப்பிடித்து விளையாடிய அனுபவம் உண்டென்பதால் சற்று சுதாரித்துக்கொண்டு சரி இவர்கள் இப்போது எந்த ரூபத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள அவர்களிடம் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

சரியாக சொன்ன நேரத்திற்கு அழைப்பு வந்தது . திருடர்கள் தான் சரியான நேரத்தில் கனக்கச்சிதமாகப் பிரசன்னமாவார்கள். 

" அதே கெட்ட வார்த்தை, பாரபட்சம் பார்க்காமல் பேசுறான்" என்கிற வடிவேல் வசனத்தைப் போல அதே ஆம்வே உருட்டுகள். என் பொய்களால் நான் எப்படி என்னைக் காத்துக்கொள்கிறேன் என்று நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டார் ஶ்ரீநிதி.

பேஸ்புக்கில் ஒரு பேஸ் இருக்கிறவர்களை தங்களின் பிசினஸ் உருட்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளப் பார்ப்பது இவர்களின் வேலை; இன்பாக்ஸில் எப்போதும் ஒரு பெண் தான் இந்தப் பேச்சைத் தொடங்கிக் குறுஞ்செய்தி அனுப்புவார். 100% ஆண் அல்ல.

புத்தகம் வாசிக்கிறீர்களா ? ஆஹா நாங்கள் ஒரு புத்தகப் பரிந்துரை குழு வைத்திருக்கிறோம் வாங்க இணையலாம் என்பார்கள்; 

குடும்பத்தோடு வாங்க, " வாங்க பழகலாம்" என்று வீடியோ காலில் பேசலாம் என்று நட்பு பாராட்டுவார்கள்;

"பாடுவீங்களா என் வைஃப் கூட செம்மயான பாடகிதான் வாங்க வீட்டுக்கு பழகலாம் என்பார்கள்;

மேலும் ஆன்மீகம், லட்சியம், கொள்கை , அது இதுவெல்லாம் என்னவென்று கேட்பார்கள், இவற்றுக்கெல்லாம் பதில் சொன்னால் அவர்கள் அடுத்தடுத்துக் கேட்கப்போகும் கேள்விகளை மாற்றிக்கொள்வார்கள். The goal is simply to persuade you to subscribe to their business. clearly nothing else.

இதற்கெல்லாம் நீங்கள் பணியவில்லை என்றால் கடைசியில் நீங்க ஓடுவீங்களா ? அல்லது உட்காருவீங்களா ? ஆஹா அட்டகாசம், நாங்களும் உட்காருவோம், வாங்க சேர்ந்து உட்காரலாம் என்கிற ரேஞ்சுக்கு இறங்குவார்கள்.

கல்லூரி நாட்களிலேயே இதுபோல நிறையப் பார்த்து சலித்துவிட்டதால் இவர்கள் இப்போது என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஒரு இரண்டு மணி நேரம் பேசினேன். அவர்கள் மூலம் தான் Rich Dad poor Dad, The Go Giver என்ற இரண்டு அற்புதமான செய்வினை / வசியப் புத்தகங்களைப் படித்தேன்.

மேற்குறிப்பிட்ட எந்த வலையிலும் சிக்காமல் இவர்களிடமிருந்து தப்பித்து விலகிக்கொள்வேன். பொதுவாக யாருமே நமக்குப் பயன்படாதவர்கள் அல்ல என்பது என் கருத்து. அந்த வகையில் இவர்களால் நிறைய சிந்தனையில் ஆழ்ந்தேன். அதைக் குறித்தெல்லாம் ஒரு புத்தகமே எழுதலாம். இப்போது இதை ஏன் சொல்கிறேன் என்றால் இவர்கள் கொரோனா காலத்திலும் ஆக்டிவாகவே இருக்கிறார்கள். சமீபத்தில் நண்பர் Venkat Prasanna ஐ, நீங்க ஓடுவீங்களா உட்காருவீங்களா என்று விசாரித்திருக்கிறார்கள்.

இவர்களை ஒருவேளை வழியில் கண்டால், ஓடுவீங்களா என்று அவர்கள் உங்களைக் கேட்டால் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுங்கள். எனக்குப் பின்னர் வந்து நன்றி சொல்லிக்கொள்ளலாம். நான் மேற்சொன்ன எல்லாமே ஒரு "Persuasion skill". அதையெல்லாம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் மற்றவரை ஏய்க்க அதை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள். எந்த வழியில் போனாலும் அந்த வழியில் ஒரு கேட்டைப் போடுவார்கள் இவர்கள். இவர்களைப் பார்த்தால் தாண்டிக் குதித்து Run. Run.

Comments