சேரவஞ்சி கவிதைகள்

சரியாக
பவோபாப் மரத்தின்
மடியில் விளக்கேற்றிவிட்டு
அதன் தண்டுகளை அணைத்துக்கொண்டிருக்கையில் தான்
நேற்றைய என் கனவு கலைந்தது

நான் நடந்து களித்த பெருவனத்தின்
கால்ச்சுவடுகளை
நான் முகிழ்த்தி வளர்த்த 
மூத்த மரங்களை
நான் அணைத்துக்கொண்ட 
பழைய கொம்புகளை 
இன்றும்
மலர்த்தி மலர்த்திப் பார்க்கிற அதன் 
வெள்ளைப் பூக்களை
மண்ணிலிருந்து அள்ளிப்பார்த்த
குவிந்த குற்றிகளை
குருதி வெளியில் நீந்திப் போய்
யாமத்தில் வழிபட்டு வருகிறேன்
பௌர்ணமி பௌர்ணமிக்கு

ஒடிந்து கிடக்கும் 
குற்றிகளிலிருந்து பறந்து;
ஒரு பூவிலிருந்து சுருங்கி;
வேர் வரைக்கும் நீந்திப் போகிற 
என் தொல்லழகைப் பார்ப்பதற்கு
நீங்கள் என் கனவுக்குள்
வரவேண்டும் 
அதற்கு நானுங்கள் மனதிற்குள் புகவேண்டும்
~
சேரவஞ்சி

(பூவிலிருந்து வேருக்கு)

Comments