இரண்டு கவிதைகள்

ஆத்மாநாமின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. அழகில் நீங்கள் இல்லவே இல்லை. உங்கள் வெளித்தோற்றம் பொய்யானது. துன்பகரமானது. நான் உங்களுக்காக ஒரு கனவு காண்கிறேன். அல்லது நீங்கள் மிதந்துகொண்டிருக்கிற ஆபாசக்கடலுக்குள் உங்களைக் காண்கிறேன், உங்களைச் சந்திக்கிறேன், உண்மையான உங்களை மீட்க. என் கனவுகளை உடனே அங்கீகரித்துவிடுங்கள் என்பார்.  எனக்கு மிக மிக மிகப் பிடித்த கவிதை. அதை ஒருமுறை வாசித்தேன். எத்தனை ஆறுதலான கவிதை.
~
~
ஒரே ஒருவரிடமாவது  ஒப்படைத்துவிடுங்கள் உங்களை
ஒரே ஒருவரையாவது சரணடையவிடுங்கள் உங்களிடம்

ஒரே ஒருவரையாவது 
நேசிக்க விடுங்கள் உங்களை
அதன் எல்லையை மீறி
ஒரே ஒருவரையாவது நேசியுங்கள்
அதன் எல்லையை மீறி

ஒரே ஒருவரையாவது காதலிக்க அனுமதியுங்கள் 
அதன் இயல்புகளோடே
ஒரே ஒருவரையாவது காதலியுங்கள்
அதன் இயல்புகளோடே

ஒரே ஒருவரின் மடியாக வேண்டும் குறைந்தபட்சம் நீங்கள்
விழுகிறவனின் விசும்பல்களைத் தாங்க
ஒரே ஒருவரின் மடியில் 
விழவேண்டும் நீங்கள் அது முக்கியம்

இரண்டே வாதைதான் 
உலகத்தில் மொத்தமே
ஒன்று
ஒரே ஒருவர்  இல்லாமல் போவது  
இரண்டு
ஒரே ஒருவராய் இல்லாமல் போவது
~
~

பிரிய கவி ஆத்மாநாம் என்ன சொல்கிறார்? கீழே வாசியுங்கள்.

~
~
என்னுடைய கனவுகளை
உடனே அங்கீகரித்து விடுங்கள்
வாழ்ந்து விட்டுப்போனேன்
என்ற நிம்மதியாவது இருக்கும்
ஏன் இந்த ஒளிவு மறைவு விளையாட்டு
நம் முகங்கள்
நேருக்கு நேர் நோக்கும்போது
ஒளி
பளிச்சிடுகிறது
நீங்கள்தான் அது
நான் பார்க்கிறேன்
உங்கள் வாழ்க்கையை
அதன் ஆபாசக் கடலுக்குள்
உங்களைத் தேடுவது
சிரமமாக இருக்கிறது
அழகில்
நீங்கள் இல்லவே இல்லை
உங்கள் கனவு உலகத்தைக் காண்கிறேன்
அந்த கோடிக்கணக்கான
ஆசைகளுள்
ஒன்றில்கூட நியாயம் இல்லை
தினந்தோறும் ஒரு கனவு
அக் கனவுக்குள் ஒரு கனவு
உங்களைத் தேடுவது சிரமமென்று
நான் ஒரு கனவு காணத்தொடங்கினேன்
உடனே அங்கீகரித்து விடுங்கள்

~

ஆத்மாநாம் & சேரவஞ்சி கவிதைகள்

Comments