சேரவஞ்சி கவிதைகள்
ஓர் இலையின் அசைவில்தான்
பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
வாழ்வின் நடனத்தை
ஓர் அணில் கொறிக்கிற
தானியத்தைப் பார்த்துத்தான்
தீர்க்க வேண்டியிருக்கிறது
வாழ்வின் பெரும்பசியை
ஒரு பறவையின் பாடலில்தான்
கரைக்க வேண்டியிருக்கிறது
வாழ்வின் துயரத்தை
ஒர் இருட்டு உப்பரிகையில்
அமர்ந்து தான் காண வேண்டியிருக்கிறது
வாழ்வின் வெளிச்சத்தைப் பற்றிய கனவுகளை
கடலலைகள் தேவையாயிருக்கிறது
நிலம் உடலில் ஏற்றும்
சுமைகைளின் சூட்டைத் தணிக்க
எல்லா கதவுகளையும் சிலநேரம்
அடைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
சுத்த சுதந்திரமாயிருக்க
வாழ்வுக்கு வெளியில்தான் அன்றாடம்
சென்று வர வேண்டியிருக்கிறது
வாழ்விற்கு உள்ளேயே வாழ்ந்துபார்த்துவிடுகிற
போராட்டத்திற்கு ஒரு கை ஒளியூட்ட
~
சேரவஞ்சி
Comments
Post a Comment