சேரவஞ்சி கவிதைகள்

கதவின் கதைகதவு பார்த்துக் கொண்டிருக்கிறது
உள்ளுக்குள் இருந்து பூட்டிக்கொண்ட
கைகளின் அமைதியை
வெளியில் நின்று திரும்பிப்போன
பாதங்களின் வெறுமையை

யாரோ ஒருவரைத்தான் 
அனுப்ப வேண்டும் திருப்பி
யாரோ ஒருவரைத்தான்
அணைக்க வேண்டும் இதில்
எப்போதும்

தீர்மானத்தின் 
நிலைக்கூண்டிலேறி நின்று 
ஒரு கணம் துடுக்காய்
தன் பக்கங்களைத் திருப்பிப் பார்த்துக் கொள்கிறது கதவு 

இவ்வளவு சுதந்திரத்தைத் தான்
இவ்வளவு கருணையைத் தான்
இவ்வளவு நேர்மையைத் தான்
இருக்க அருள்கின்றன சுவர்கள் 
எப்படிப்பட்ட கதவின் 
எப்படிப்பட்ட விசுவாசத்திற்கும்
~
சேரவஞ்சி

Comments