வைக்கம் முகமது பஷீர் - பூமியின் வாரிசுதாரர்


ஜூலை 5 - ஆசான் பஷீரின் நினைவு தினம்
~
காலையில் சூஃபியும் சுஜாதாயும் படம் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருக்கையில் படத்திலிருந்து ஏனோ மனம் வெளியேறிய் திமிரியது. பஷீரை வாசிக்க வேண்டும் போலிருந்தது காலையிலிருந்தே. படத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்த நாள் வேறு வேலைகளில் கடந்தது. 

இரவு உணவுக்குப் பின் "பூமியின் வாரிசுதாரர்கள்" சிறுகதையை வாசிக்கவேண்டும் போலிருந்ததென்று வாசித்தேன். "பூவன் பழம்" எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு பிடித்த கதை "பூமியின் வாரிசுதாரர்கள்".

காதல் மிகுந்த ஒரு கணவன் மனைவியின் அன்றாட வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானதாக இருக்கும் என்பதற்கு நான் காட்டும் உதாரணம் பஷீரின் இதுபோன்ற கதைகள் தான். நாற்பது நிமிடங்கள் இந்தக் கதையை ஆர அமர வாசித்துச் சிரித்து, ரசித்து, லயித்து, கொண்டாடி, இன்னும் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். அத்தகு கதை. இன்றளவும் ஒரு கரப்பான்பூச்சியை அடிக்கிற மனம் தான் எனக்கு வாய்த்திருக்கிறது.

ஒவ்வொரு கரப்பானை அடிக்கிற தருணமும் ரணகளமானது. அதை யாராவது படம் பிடித்துக் காட்டினால் பூமியின் வாரிசுதாரர்கள் கதையில் ஒரு துளி வரும். இதைப் போன்ற துளித்துளியான சுவாரசியத் தருணங்களின் தொகுப்பு வாடிக்கையான எங்கள் வாழ்க்கை.

பஷீரை வாசித்து நாம் சரியாகத் தான் வாழ்கிறோமா என்று பொருத்திப் பார்த்துக்கொள்வது ஒரு அனிச்சையான, சம்பிரதாயமான நிகழ்வு. அது எப்போதும் சரியான ஒரு காலவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறுவது மாதிரி ஒரு மகிழ்ச்சி என் வாழ்வில் வேறு எதுவும் இல்லை என்றே சொல்வேன்.

என் வாழ்வில் பெறும் பகுதியை தன் கதைகளின் மூலம் சுவாரசியமாக்கியவரும், என் ஆழ்மனதிற்குள் மண்டிக்கிடக்கிற கிலோக்கணக்கான சிரிப்புக்களையெல்லாம் கிளர்த்தியெடுத்து உதடுகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொணர்ந்து தரும்

கதைகளின் சுல்தான், என் மனதிற்கு மிகப்பிரியமான ஆசான் பஷீர் நினைவு தினம் இன்று. (ஜூலை 5)

அவரின் கதைகளைப் படித்து சந்தோஷத்தில் அழுத நாட்களை நினைத்து நினைத்துப் பார்த்து மகிழ்கிறேன்.

ஜிப்ரானின்  Jesus the son of man வாசித்துக்கொண்டிருக்கிறேன் இரண்டு நாட்களாய்.
அதில் இடம்பெறுகிற வசனம் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது

மனிதனின் மகனாகிய ஏசு சொல்கிறார்.

"நீங்கள் இவருடைய தாய்.
நீங்கள் இவர்களுடைய மகிழ்ச்சிக்காக அழுகிறீர்கள்.
உங்கள் கண்ணீரை நினைவில் வைத்திருப்பேன்."

வாழ்வில் ஒரு முறையேனும் யாருடைய மகிழ்ச்சிக்காகவோ நாம் மனம் கனிந்து அழுதிருப்போம் இல்லையா?
ஒரு வேண்டுதலாகவோ, அன்பாகவோ. ஏதொவொரு உணர்வின் பொருட்டு.

வைக்கம் முகமது பஷீர், என்னை, என் போன்ற பலரை சந்தோஷத்தில் ஆழ்த்தி அழவைத்தவர் !

ஆசானை அவர் நினைவு நாளில் மனதார நினைத்துக்கொள்கிறேன்.


Comments