தாயுமானவர் பாடல்எது நன்றென்றும் எது தீதென்றும் அறியேன். நான் என்பவன் யார் என்பதையும் அறியேன். நான் ஒன்றும் அறியாத ஏழை 

என்கிறார் தாயுமானவர்.

பாரதியும் 
"நானெனும் பொய்யை நடத்துவோன் நான்" என்பார்

தாயுமானவரின் தாக்கம் பாரதிக்கு அதிகம். தாயுமானவரின் பாடல்களை முழுக்கப் படித்தவர்களுக்கு இது விளங்கக்கூடும்.

ஞான மார்க்கத்துக்குள் சென்ற எவராயினும் அவர் தன்னை முழுமையாய் அறிந்து தன்னிலிருந்து விடுபட்டவர் அல்லது தான் என்பவன் இந்த இயற்கையின் பேராற்றலுக்கு முன் ஒன்றுமற்றவன் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்பவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.

அடுத்த முறை எனக்கு எதாவது தெரியும் என்று நீங்கள் சொல்லும் முன் உங்கள் ஆழ்மனதைக் கேளுங்கள்.

நீங்கள், நான், இவர், அவர். எவராயினும் ஒரே ஒரு உண்மை தான் மனித அறிவுக்குப் பொருத்தமானது. நாம் எவ்வளவு கற்றாலும் கற்றது கைம்மண் அளவு.

எறும்புந்தன் கையாலெண் சாண்

என்று முடிகிற ஒவையின் பாடல் சொல்கிறது. ஓர் எறும்பு கூட அது தன் கையால் தன்னை அளக்குமெனில் அதுவும் எட்டு சாண் இருக்கும். உங்களுக்கு இது தெரியும் அது தெரியும் என்று நீங்கள் பெருமை பேசிக்கொள்வதற்கு முன் ஒருகணம் யோசித்துப் பாருங்கள் என்கிறார்.

அறிவென்பது, நமக்குத் தெரிந்தது மிக மிகச் சொற்பம் தான் என்றறிகிற தெளிவு.

#தாயுமானவர் 

Comments