ஆத்மாநாம் கவிதைகள்

நான் ஊற்றும் நீரை விட
நான் தான் முக்கியம் அதற்கு
-ஆத்மாநாம்


கதைகளுக்கு பஷீரும், கவிதைக்கு ஆத்மாநாமும் இருந்ததாலே என்னால் பல இருண்ட வெளிகள் எதுவென்று அறியவும், அவற்றைக் கடந்து வரவும் முடிந்ததென்று நினைக்கிறேன்.

ஒருகட்டத்தில் இந்த இருவரது புத்தகங்கள் போதுமோ என்கிற அளவுக்கு மனம் வாழ்வின் அத்தனை புதிர்களுக்கான விடைகளையும் கண்டடைந்துவிட்டதைப் போல் மகிழத் தொடங்கியது.

ஒரு இருநூறு புத்தகங்கள் என்னோடு இங்கு இருக்கும். ஊருக்கு வரும் போது நண்பர்கள் யாரிடமாவது கொடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் புத்தகங்களை கரூருக்கு அனுப்பி வைக்கச் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

கொரோனா எப்போது முடியுமோ கொரோனாவுக்குத் தான் வெளிச்சம். இடையில் எப்போது வந்தாலும் என்னோடு கையில் ஐந்து புத்தகங்கள் இருக்கும். பயணத்தின் போதும் நான் வீட்டில் விட்டுச்செல்லாத புத்தகங்கள் ஐந்து. பஷீரின் உலகப்புகழ்பெற்ற மூக்கு, ஆத்மாநாம் படைப்புகள், திருக்குறள், பவுலோ கோய்லோவின் The Alchemist, கோல்மேன் பார்க்ஸின் ரூமி கவிதைகள். ஒரு மாதத்தை, ஒரு வருடத்தை, ஒரு ஆயுட்காலத்தை எனக்குக் கடத்த எனக்கு இந்த ஐந்து புத்தகங்கள் போதும்.

பொரிகடலை
பசி தீர்க்கும்
சிறுகாசு
சுகம் சேர்க்கும்
பூவிதழ்கள்
வழிகாட்டும்

என்ற ஆத்மாநாமின் கவிதைக்கேற்ப, இது அது என்று பெரிய விருப்பமெதுவுமில்லை, நேரத்திற்கு ஏதோவொரு உணவு, படிக்க இந்த ஐந்து புத்தகங்கள். ஒரு நிறைவான வாழ்க்கைக்கு இதுவே மிகப்பெரிய வரங்கள் என்று தோன்றத் தொடங்கியது பஷீரின் ஜென்மதினத்தையும், ஆத்மாநாமின் கவிதைகளையும் படிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் தான் என்று நினைக்கிறேன்.

"பொரிகடலை பசி தீர்க்கும்" என்ற மூன்று சொற்களை முணுமுணுக்கையில் இதயப்பூர்வமாக ஒரு நம்பிக்கை பிறக்கிறதா இல்லையா?

பிறக்கும்.

அதுதான் கவிதை ஆற்றும் பசி. எப்பசியையும் ஆற்றும் வல்லமை கவிதைக்கு உண்டு. அதும் ஆத்மாநாமின் கவிதையில் ஏராளம் உண்டு.

பொதுவாக எந்தவொரு சிறு வாதங்களில் ஈடுபடுவதிலிருந்தும் வெளியேறி பல ஆண்டுகள் கடந்துவிட்டன என்றே நினைக்கிறேன். மனம் அதன் அமைதியை, நிம்மதியென்று அது நினைக்கிற எதையும் எத்தனை பொருட்செலவிலும் பெற்றுக்கொள்ளும். பெரும்பாலும் நிம்மதியென்பது எனக்குச் சொல்லற்ற நிமிடங்கள். பெரும்பாலும் பேசுவதில்லை. அலைபேசியில் வீட்டிற்குப் பேசுவேன், மற்றபடி என் புத்தகங்களுண்டு நானுண்டு.

Speak only if it improves the silence.

என்று காந்தி சொன்னதில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையுண்டு. கடவுளின் சொற்கள் இவை.
இந்தச் சொற்களின் மேல் படர்ந்திருக்கிற வெளிச்சத்தை உள்ளபடி ஆராதித்து அதை மனதார ஏற்று வழிபடுகிறேன், பின்பற்றுகிறேன்.

ஆத்மாநாம் என்ன சொல்கிறார் ?

உதிரும் மலரின்
கணிதத்தை
என்றாவது
நீங்கள் யோசித்திருந்தால்
மட்டும்
இது புரியும்
இல்லை
என்னோடு எப்போதும்
உறவாடும்
பாறையைக் கேளுங்கள்.


என்கிறார்.

நாம் ஏன் ஏரிகளாய்
இருக்கக்கூடாது ?
சலனமற்று
வான் நோக்கி
பாறைகளுடன்
பேசிக்கொண்டு.


என்கிறார் மற்றோர் கவிதையின் விளிம்பில்.

ஒரு உதிரும் மலரின் கணிதத்தைப் புரிந்துகொள்வதற்குத்தான் இந்த வாழ்க்கை. ஏரிகளாய் சலனமற்று வான் நோக்கிப் பாறைகளுடன் பேசிக்கொண்டிருப்பதற்குத் தான் இந்த வாழ்க்கை.
பேச்சு அமைதியை விட பயனுள்ள ஒன்றைச் செய்யுமாயின் அப்போது பேசத்தான் இந்த வாழ்க்கை.

வள்ளுவரும் என்ன சொல்கிறார் ?

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து


தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும்

ஆழ்ந்து ரூமியையும், பஷீரையும், நாம் வாசித்தால் அவர்களின் தத்துவங்களும் எல்லா சொற்களின் மூலம் அமைதிக்குப் பயணிக்கும் தனித்தனி நதிகளே.

நான் இவர்களிடமிருந்தெல்லாம் தான் வாழ்வைக் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன் என்று நினைக்கிறேன்.

ஆத்மாநாம் நினைவு நாள் இன்று. நினைவு நாள் என்பது அவருடைய கவிதைகளோடு வாழ்வதற்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்பு. மற்றபடி மனம் வாய்க்கும் போது எழுத்து, பகிர்வு.

உங்களுக்குத் தேவையான மலர்கள், நதிகள், ஏரிகள் ஆத்மாநாமிடம் உண்டு. ஆத்மாநாம் அதை எழுதி வைத்தது அவருக்கு உதவாத நிச்சலனம் நமக்கு உதவக்கூடும் என்பதற்காகத்தான் என்று நம்புகிறேன். நான் இதை எழுதுவதும் ஆத்மாநாமை என் மூலம் யாரேனும் அறிந்துகொள்வார்களே என்ற நம்பிக்கையில் தான்.

சொல் சொல்லாய் வாசிக்க வாசிக்கத்தான் சொல்லிலிருந்து விடுபடுகிற மோனநிலை வாய்க்கும்.
அறிதலே விடுபடுதலின் ஆதாரம். ஆத்மாநாம் போன்ற கவிஞர்களைத் தெரிந்துகொள்வது அறிதலின் மிகப்பெரிய மைல்கல் என்றே நினைக்கிறேன்.

என் ரோஜாப் பதியங்கள் கவிதையில் ஆத்மாநாம் சொன்ன அந்த இருவரிகளில் ஒருவருக்கு ஆத்மாநாம் யாரென்று பிடிபடுமாயின் ஒட்டுமொத்த கவிதை உலகமுமே இன்னும் அற்புதமாய் அவர்களுக்குப் பிடிபடும்.

மன நலம், உடல் நலம் எல்லோர்க்கும் வாய்க்கட்டும்

இன்று ஜூலை 6, ஆத்மாநாம் நினைவு நாள்.

ஆத்மாநாமின் புகழும் தமிழும் வாழ்க!

https://www.cheravanji.com/2020/07/blog-post_5.html

Comments

  1. அருமையான பதிவு, ஆத்மாநாம் என்னை கவர்ந்து விட்டார் என்றே சொல்லவேண்டும். அவருடைய கவிதை முழுத்தொகுப்பு கிடைக்கிறதா??? இருப்பின் சுட்டவும்!


    நன்றி

    ReplyDelete
  2. தோழர் தாங்கள் கருவூரா...

    ReplyDelete

Post a Comment